காப்புச் செய்யுள்கள்
**********************கணபதி துதி :
1
கோட்டானை தன்முகத்தைக் கொண்டானே நின்னருளைப்
பாட்டாலே பாடி, பருகுவேன் நற்றமிழை!
கேட்காமல் கேள்வி நலமருளும் நாயகாவென்
வாக்கினில் நீவா வலிந்து
2
கொஞ்சுமொழி பேசிடும் பிள்ளை மழலைபோல்
பிஞ்சுமொழி பேசிப் பழகிடும் என்பிழையை
நெஞ்சில் நினையாதே, நானெழுதும் பாவிற்கு
கந்தனின் சோதர;நீ காப்பு
3
சொல்லும் செயலதும் சீர்மிகச் செய்வோனே
நல்லன நெஞ்சிருத்தி நாவிசைக்க வந்தேன்யான்
அல்லல் கலைந்திடும் ஆனை முகத்தானே
தொல்லை களைந்துள்ளே தோன்று
4
பாரதி தந்த;நல் பாஞ்சாலி சூளுரையை
பாரதிர வெண்பாவாய் பாடிநிற்பேன்- தீர
மனத்துடன் மாசின்றி மாண்பாய் முடிக்க
கணபதியே இந்நூற்கு காப்பு
கந்தனுக்கு வணக்கம் :
5
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலாச் செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை சந்ததமும் நெஞ்சேநீ
கந்தனையே எண்ணிக் கனி.
எந்தனைக் காக்கும் ஏரகச் செல்வமே
வந்தனை செய்கிறேன் வள்ளி மணவாளா
சிந்தனையில் எழுகின்ற சீர்மிக்க பாக்களுக்கு
கந்தனே நீயாவாய் காப்பு
சரஸ்வதி வணக்கம் :
6 -
கல்வியின் தாயே கலைவாணி வேண்டுகிறேன்
எல்லையிலா இன்னமுதாம் என்தமிழை - பிள்ளை
விளையாட்டாய் பாடுகிறேன், வித்தகியே ஞானக்
கலைமகளே; காத்தருள் செய்
7 -
வேதத் திருவுருவே வேதாந்த பொற்குவையே
பாதம் பணிந்து பரவசமாய் பாடுகிறேன்
ஓதுமென் பாக்களெல்லாம் ஓங்கி உயர்ந்திட
வாதின்றி வாழ்த்திட வா
8 - நாவினிக்கப் பாடி நயம்பட நல்கிடும்
பாவினை நானும் பயிற்றவல்லேன் - பூவிலுறை
நாயகியே பாவென்று நானெழுதும் யாவிற்கும்
தாயன்பாய் சொல்லெடுத்துத் தா..
9-
கல்வியின் நாயகியே; தாயே கலைவாணி;
சொல்லுள்நீ ஏறி சுடர்விடுவாய் - மெல்லியலாள்
கோபத் தழல்கொண்ட கூந்தலாள் பாஞ்சாலி
நாபற்றி பேசவந்தேன் நான்!
10-
பண்ணுக்கு அதிபதியாய் பாடற் கரசியுமாய்
எண்ணம் நிறைத்தென்றும் ஏற்றங்கள் தந்தருளும்
அன்னையை யாசித்தேன் அன்னவள்தாள் பூசித்தேன்
மென்கமலப் பாதமே மின்
11-
வெள்ளைக் கமலத்தில் வீணைகொண்ட நாயகியும்
பிள்ளைத் தமிழால் பிதற்றுமென் கள்ளமிலா
நற்கவியை நானிலத்தோர் ஏற்றிடவாய் நாமகள்தன்
சொற்கள் தருவாள் சிறந்து.
12 -
பஞ்சவர் பத்தினியே பாஞ்சாலி பேருடையாய்
வெஞ்சமர்க்கு வித்திட்டாய், வீரர்கள் - செங்குருதி
நீக்கியத் தீச்சுடரே நின்புகழை பாடுமென்
வாக்குக்கு வலிமை வழங்கு
13-
உலகமே போற்றிடும் பாஞ்சாலி உன்னைப்
புலமையிலாப் புல்லன்யான் பாட -பலவிதப்
பாவிடர் நீக்கிநல் பண்களாய் மாற்றியென்
நாவினின்று காப்பாய் நயந்து.
************************
பாரதிக்கு வணக்கம்:
14-
பாரதம் பெற்றநல் பாட்டுடை பாவலன்
பாரதி பாங்காய் படைத்து நமக்களித்த
பாரத பங்கை;வெண் பாவாய் பகிர்கிறேன்
பாரதிதன் பாதம் பணிந்து
கண்ணன் காப்பு
15
மண்ணை விழுங்கிய மாலவன் தன்னழகைக்
கண்ணால் பருகிக் கருத்தினால் - எண்ணிநிதம்
ஊண்மறந்து உள்ளம் உருகிநாம் பாடிட
வான்திறந்து பெய்யாதோ விண்
16
கார்குழல் மேனியனாம் கண்ணனென்ற பேருடையான்
பார்முழுதும் பல்லாண்டு பாடுமணி மார்பன்
புவியாளும் உத்தமனின் பேர்பாடி கேட்கும்
செவிகேளா வேறோர் சிறப்பு.
17
பாஞ்சாலி தன்புகழைப் பாவில் தரவந்தேன்
தீஞ்சுவை ஊட்டி சிறப்பான பாக்களை
வாஞ்சையுடன் காத்திடென்று வந்தித்தேன் உன்னடியை
காஞ்சனை மன்னவனே காப்பு.
அவையடக்கம்:
18-
புல்கொண்டு பொற்பை புரட்டும் செயல்போல
மெல்லூரும் ஆமையும் மேகம் தொடும்செயல்போல்
வல்லாள்தன் வாக்கை வகையாய் இயம்பிட
நல்வாக்கின் நாயகி நாமகளை உள்ளிருத்தி
சொல்ல முனைந்தேன் துணிந்து
19-
மழலை மிழற்றிடும் சொல்போல யானும்
பழகிடும் பாவைப் பதிக்க - பழகுமொழி
கற்றோரும் காய்வரோ ? கல்லானுக்(கு) என்னாளும்
உற்றமொழி சொல்வார் உவந்து
20-
செய்யும் செயலதற்கு சீர்மிக்க சொல்லறியேன்
பெய்யும் மழைபோல பேசலுற்றேன் - நொய்ம்மையாய்
என்கவிகள் கண்டாலும் எண்ணிடார் ஏசிடார்
நன்மையே நாடிடும் நல்லோர்தான் ஆதலினால்
என்னிடம் சேரா(து) இகல்.
************
No comments:
Post a Comment