Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -005

சகுனியின் வஞ்சனைக் கூற்று
63
அஞ்சுதலும் வேண்டா அருமை மருமகனே
அஞ்சு தலைக்கதிபன் அஞ்சும் செயலதை
கெஞ்சியேனும் செய்து கெடுதல் விளைவிப்போம்
கொஞ்சியவன் கொற்றம் குலைத்து. 

64. 
வஞ்சியவள் எக்களிப்பை வஞ்சித்தே நீர்த்திடுவோம்
பஞ்சவர் பத்தினியைப் பாரிகழச் செய்திடுவோம்
மஞ்சுசூழ் வெற்புபோல் மங்கையவள்  பேர்புகழை
வஞ்சத்தால் வீழ்த்தலாம்  வா

65
வெற்றி உனக்கு விரைவிலே நான்தருவேன்
பற்றும் விதியவரை பாரென் மருமகனே
எட்டா உயரத்தில் ஏறியவர் நின்றாலும்
வெட்டுமென் பகடையும் வென்று

66
உன்தந்தை ஒப்பிடினும் உன்னுற்றார் ஒப்புவரோ?
என்செய்வாய் மன்னவர்கள் ஏற்குமுரை சொல்வதற்கு? 
முன்னவனாம் வீட்டுமன், முனிராஜன் அன்னவரும்
எண்ணுவரோ உன்நிலைதான்  எண்ணு!

வீட்டுமன் - பீஷ்மன்

67
என்னுரைகேள் மன்னவனே ஏற்றமிகு மண்டபத்தை
கண்ணுறவே  கட்டிவைத்து திண்ணமாய்  வாருமென
மன்னவரை கூட்டிவந்தால்  மண்ணோர் இகழ்ந்திடவே
கந்தலென ஆக்கிடுவேன் காண்

68
என்னுமுறை கேட்டிட ஏந்தல்  உளமகிழ்ந்தான் 
என்னுயிர் ஈந்துநீ எந்தைக்கும் மேலானாய்
என்பழியும் தீரும் எனமகிழ்ந்து  ஆர்ப்பரித்தான்
இன்னுமேன் தாமதம் எப்போ(து) இதாகுமென்று
தந்தைமுன்  செல்லத் தவித்து

No comments:

Post a Comment