Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் - வெண்பாவில் 002

அத்தினபுரமும் முற்கதை வரலாறும்
*************
21 -
அத்தினபுரி என்றோர் அழகு  நகரதுவாம்
மொத்த அழகும் முழுதுள்ளே - வைத்ததுவாம் 
பித்தம் தருகின்ற பேரழகோ  நம்முடைய
சித்தத்தில் நிற்கும் சிறப்பு !

22-
எத்தனைச் செல்வங்கள் என்றியம்ப யாருளரோ
முத்தொளிர் மாளிகையுள் முத்தணி மாதர்கள்
எத்திசை நோக்கினும் எல்லாமும் அங்குண்டு 
சித்தத்தால்  காணும் சிறப்பு

23-
அந்தணர்கள்  வீதியுண்டு ஆங்கவர் பாடமுண்டு
செந்தழல் யாகமுண்டு செவ்வியநல்  வேதமுண்டு
முந்தியவர் ஓதிட  மூவர்தேவர்  ஆர்த்தெழுந்து 
வந்துநின்று காப்பார் வலிந்து. 

24
மெய்தவத்தார் உண்டெனினும் பொய்த்தவரும் அங்குண்டு
செய்தவத்தால்  சீர்பெற்றார்  செம்மைநோக்கி சிந்தைமாறா
பொய்தவத்தார் நின்றார் புலைத்து. 

25
வீரக்  கழல்கொண்டார் வில்லொடு வேல்கொண்டார்
பாரமாய்  எண்ணிப் பகையழித்துச் சென்றிடுவார் 
வீர மறவர் வரைவிஞ்சும் தோளுடையார்
தீரரவர் செய்கை சிறப்பு


26
சுற்றும் குதிரைகள் சூழ்ச்சிமிகு கோட்டைதனில்  
சற்றும் சலியாது துஞ்சிடா வாரணங்கள்
முற்றிலும் சூழகழி முன்மயங்கும் வேலையதும்
சொற்களில் சேரா சிறப்பு. 

சூழகழி - சூழ் அகழி, வேலை - கடல்
27
வண்ணமாய் பற்பல விண்தொடும் கோபுரங்கள்
திண்ணமாய்  செப்பிடின் சீர்பல கொண்டிருக்கும் 
விண்ணோரும்  எண்ணி வியந்திடும் நன்னகர்
அண்டத்தில் காணா அழகு 
-+++

28 -
அவனிபுகழ் மாளிகை; அத்தாணி  மாடம்  ; 
பவனிவர  நல்வீதி; பால்சொரியும் மாக்கள்; 
தவத்தினில் சீலர்கள் ; தீரர் பலரென்றே; 
அவயமாய் கொண்ட அரசு. 

​29-
ஆழ்ந்த அழகுடை ஆறவள்   பேர்யமுனை
வாழ்மக்கள் யாவர்க்கும் வற்றாநல் - ஊழெனவே
வாழ்விக்கும் தன்மையினால் வள்ளலாய் ஆனாள்தன்
பாழ்நிகர்த்த வண்ணம் வளர்த்து 

30 -
கொள்ளை அழகுக்கு; கோமானாய் பாண்டுவெனும் 
வெள்ளை உடல்கொண்டான் வீற்றிருந்தான் - வல்லியதோர்  
சாபத்தால் தன்னுடல் சாய்த்ததினால்; முன்னவன்தன் 
தாபமதை தீர்த்தான்  தணிந்து 

31 - 
மஞ்சத்தில் சேர்ந்தாலே மாண்டிடுவாய் என்றதோர் 
நஞ்சொத்த சாபத்தால் நாயகன்  உயிர்மாள 
தஞ்சம் அடைகின்றார்  தானவனின் ஐம்புதல்வர்  
 வஞ்சம் அறியாது   வந்து 

துரியன் செயல் :

32 - 
தனக்கோர் தாயாதி தன்னெதிரே கண்டதும்
மனம்வெதும்பி மாயச் சதியால்  - குணம்கொண்ட
பாண்டவரை மாய்த்திடவே பல்லரக்கு  மாளிகைக்கு
வேண்டி அனுப்பினான் விரைந்து

33 - 
சதியை தவிர்த்து சாகசம் செய்து
விதிவழி பாஞ்சாலன் வஞ்சியை சேர்ந்து;
மதியிழந்து மன்றில் மறுபடி சேர்ந்தார்
விதிவழியில் முன்னிருந்த வீடு

34- 
 உள்ளெரியும் நஞ்சாய் உருக்குலைக்கும் வஞ்சத்தை
உள்ளில் வளர்த்தான்  உவகையுடன் - கள்ளத்
துரியன்தன்  வஞ்சம் துலங்கிட; தாத்தன் 
பிரித்தனன்  நாட்டைப் பகிர்ந்து

35 - 

கொடுத்த இடமும் கொடுவனம் ஆயினும்
எடுத்து  முடித்தார் எழிலுடை  நாடென
அடுத்துக் கெடுக்கும் அரவக் கொடியோனும்
கடுத்துக் கிடந்தான் கழுது.
****

No comments:

Post a Comment