திருதராட்டிரன் சம்மதித்தல்.
136.
அதிசய மைந்தனும் வந்து அழிக்க
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான்
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே மதித்து
137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில்
சதிசெய்கை செய்யநான் சம்மதித்தேன் என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு
விதியிது என்றான் மலைந்து
மண்டபம் உருவாகுதல்.
138
-
மஞ்சனும் மாமனுடன் மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில் பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும் கண்டு வியந்திட
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும்
மிஞ்சி உயர்ந்ததவ் வீடு
139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள்
கொண்டு சமைத்தார் கொலு
140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல்.
141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும்
அரவின் அழகுபோல் ஆம்.
விதுரனை தூதுக்கு அழைத்தல்.
142
மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்
இதுவரை நீதிசொன்ன தன்நிலைக் கொன்று
முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்
விதுரனைத் தூதாய் விடுத்து.
143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான் சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்
144
வஞ்சனை மாமனின் வஞ்சகமும் உள்ளதென்று
பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும்
அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும்
மிஞ்சிடா தென்று மிழற்று.
( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் )
145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்
என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான்
விதுரன் வேதனையால் சொல்லுதல்
146
போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்
ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்
பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்
மூச்சிலும் உண்டே முரண்
147
எத்தகு வார்த்தை எளிதில் இயம்பினாய்
மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர்
கற்றதை காற்றில் கரைத்தனையோ முன்னவனே
உற்றதை நீயும் உரை
148
வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே
கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா
பஞ்சவரைச் சூதில் பகடையால் வென்றபின்னர்
எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?
திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்
149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும்
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ நம்மையும்
வென்று நடக்கும் விதிவழி நாம்செல்வோம்
என்றனன் மன்னன் இயைந்து.
150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி
உந்தும் நிலையில் உலைந்து
No comments:
Post a Comment