Wednesday, January 15, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -016

திருதராட்டிரன் சொன்னதை விதுரன்  உரைத்தல்

164

வேள்வி முடிந்து வெகுநாள் ஆனதால் 
தோள்வலி மிக்கோர் சொற்கள்தாம் நித்தமும் 
காதினில் கேட்குதாம், கண்டழை  நீயென்று
மேதினி  ஆள்கின்ற வேந்தனும்  சொல்லிட 
தூதென வந்தேன் தொடர்ந்து

165
இந்திரன்  மண்டபமும் இங்குண்டு காணென
சுந்தரமாய் கட்டி எழுப்பினர் -தந்திர
மாளிகை; கண்டோர் புலனை மயக்கிடும்
கேளிக்கைக் காடதாம் கேள்.

167.
தங்க மயமாக தானுயந்த  மண்டபத்தை  
மங்கையுடன்   உங்களைக் காண அழைக்கிறான்   
அங்குநல் நாள்குறித்து ஐவரும் வந்தங்கு
தங்கிடவாய்  அன்பில் தழைத்து. 

168
மன்னவன் சொற்கள்தாம்  மற்றும் சிலவுண்டு
மன்றிலே சூதுடன் மாமனும் உன்னிடம்
பந்தயம் கோரும் பயமுண்டு ஆமிதனைச் 
சிந்தையில் கொள்நீ சிறிது. 


169
மரத்த மனமுடை  மாமனின் செய்கையால் 
தரம்கெட்ட மைந்தனோ .தார்வேந்தைத்  தூண்ட
உரம்கெட்ட வேந்தனும் உன்னிடம்  அனுப்ப
தரங்கெட்டு வந்திட்டேன்  தாழ்ந்து.

170
பதுமை எனவானான் பஞ்சவரின் மூத்தோன்
விதுரனின் வார்த்தை விழுங்கி , இதுதகுமோ
என்றயிர்த்தான், சொல்மயங்கி  இன்னலுற்றான் சிந்தையில் 
நின்றிடா எண்ணத்தில் நின்று.

தருமன் பதிலுரைத்தல். 
171

சிந்தை நடுங்கித் தருமனும் கேட்கிறான்
"எந்தையோ இவ்வுரை  ஏத்தினான்? நல்லோர்முன் 
கந்தையென  ஆகிட காண்பதற்கோ  நம்புகழும் 
விந்தை உலகில்யாம்  வீழ்ந்து"

172
நன்று  எமக்கென்றும் நாடிலன் சின்னவன்
மன்றில் சூதுண்டு வாவென்(று) அழைப்பதால்
எந்தையே ஏற்கமனம் ஆவதில்லை  என்றயிர்த்தான் 
சிந்தையில்  ஐயமதை சேர்த்து

173
முந்திய நாட்களில் முற்றாய் எமைவெறுத்து
தந்திரம் செய்தெமை சாய்க்கப் பார்த்ததை
தந்தைநீ  அறிவாய்  தரமிலான் செய்கையும் 
தந்திடு நல்லுரை தான் 

விதுரன் பதிலுரைத்தல்

174
அருமறை யாவும் அறிந்தோர் தவிர்ப்பர்
வெருட்டி மயக்கினான் வேந்தனை  மைந்தன் 
தருமங்கள் யாவும் தானுரைத்தேன்  அங்கு
வருந்தி இதற்கு மறுத்து


175
கல்லும் இரங்கிக் கலங்கும் வகையிலே
சொற்களைச்  சொன்னானென்  சோதரன்  -சல்லிப்பயல் 
மல்லுக்கு நின்றங்கு  மன்னனைச் சொற்களால் 
புல்லனும் மாற்றினான் புகுந்து 

176
இன்னுமென்ன சொல்லுவது? என்னிடம் மன்னவன்
சொன்னதைச்  சொல்லி;அவர் சூழ்ச்சியும் தானுரைத்தேன்.
பின்னவர் நால்வரின்  பேசு மொழிகேட்டு
உன்நிலை நீயும் உரை. 

177

தருமம் அறிந்தவன் சான்றோன் நீயும்
கருமம் இதுவெனக் கண்டு -வருகிற 
வல்வினை சற்றே மனதுணர்ந்து நீய்ந்தன்
சொல்லுக சொல்லில் சிறந்து. 

No comments:

Post a Comment