Thursday, January 9, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் 009

சுயோதனன் தந்தையைச் சினந்து சொல்லுவது

105
பாம்புக் கொடியோன் பகரத் தொடங்கினான்
பாம்பெனச் சீறிப் பலமொழி சொல்கிறான்
தாம்கொள் மகவிற்கு தந்தைசெய்யாத் தீவினையை 
வேம்பென செய்தாய் வினைந்து 

106
இன்னமுதாம் ஐவர்; இன்னல் உனக்கானேன் 
துன்னமான(து) உள்ளமென்   துன்பறியா மன்னவனே
என்னன்ன கட்டுரைகள் என்னிடம் சொல்லுகிறாய்
வன்னமாய் வார்த்தை வளைத்து. 

சகுனியிடம் உரைத்தல்;

107
மாமனே கேளிதனை மன்னர்க்கோர் நீதி;மற்றுத்
தாமனைவர்க் கோர்நீதி தந்தானவ் வியாழமுனி
ஆமதனை  ஏற்காது அத்தனையும் தள்ளிவிட்டான்!
மாமன்றில் நின்றேன் மலைத்து

108

இந்திர போகமென ஏய்க்கிறான் என்னையும்
மந்திர வாதிபோல் மாய்மாலம்  சொல்கின்றான் 
தந்திரம் கற்றோர் தரணியில் யாருண்டென்
தந்தைபோல் என்றான் தவித்து

 
109 
மாதர்தம் போகம் மயக்கும் மொழிபேச்சும்
சாதமும் நெய்யும் சதமென்றான்  எந்தனுக்கு
சோதரர் பாண்டவரைச் சொந்தமெனச் சொல்லியவன்  
பாதகம் செய்கிறான் பார்

துரியோதனன் தந்தையிடம் தீர்மானமாகச் சொல்லுவது 

110

கண்ணிலே வெண்ணெயுடன் காக்கின்றாய் பாண்டவரை
கண்ணிலே சுண்ணமுடன் காய்கின்றாய்  என்னையும்நீ
மண்ணிலே பற்றுவைத்தேன் மாறேன் மனமென்றும்
எண்ணத்தில் என்றும் எண்ணு

111

தீதென்று நீநினைத்தால் தீய்த்திடென்னை;  தந்தையே
வாதென்று இன்னுமென் வாய்த்திறவேன் போதுமுந்தன் 
சூதெனக்கு, பாண்டவர் துய்க்கநான்  கூற்றமெனும் 
மாதென்னைச் சேர்ப்பேன் மடிந்து

112

மாதிறத்தோய்  போர்நீ மறுத்தால் மாறுவழி 
தீதிலா நல்வழியாய்  சீராக நானுரைப்பேன்
கேதின்வாய் வீழ்நிலவாய் கேள்வரை வீழ்த்திடுவோம் 
சூதினில் வெல்வோம் சுழித்து

No comments:

Post a Comment