Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -003

இராசசூய யாகம் : முன்கதை  தொடர்ச்சி 
****

36. சிந்தனைக்கு எட்டா சிறப்பினைக் கொண்ட
இந்திர லோகம் இறக்கி அதன்மேல்
எழுப்பியதோ இந்த அரண்மனை என்று
செழுமையாய் நின்ற சிறப்பு.

37. மன்னர்க்கு மன்னராம் மாமன்னர்  ஆகவென 
திண்ணமுடன்   ஐவரும் சீர்மிகும்  -கண்ணன்
துணையுடன் காண்டீபம் சேர்ந்திடவே  செய்த 
இணையிலா யாகம் அது!

38. யாகம் எதிர்த்தோர் யாவரயும் போரிட்டு
தேகம் அழிந்திடத் தீர்த்தனர்; பாகம்
பிரித்தபின் பாண்டவர் பல்லுயரம் ஓங்க
சிரித்தனர்  வெற்றிச் சிரிப்பு

துரியோதனன் மாளிகை காணல்:
*****************************************

39. மண்டபம் கண்டான் மாமனொடு அன்னேரம்
கண்டது வாவியென்று கால்வரை ஆடைதூக்கி
நாணம் இழந்து நடந்தான்  உண்மையில்
வானவன் செய்த வழியது; மாயம் 
உணரா தலைந்தான் உழன்று 

40. ஆங்கோர் இடத்தினிலே  ஆழியென  நீரிருக்க
காண்கையில் மாயமென காணாது - தாங்காத 
தண்ணீரில் கால்வைக்க தள்ளாடி வீழ்ந்தான்
கண்டவர் தான்நகைக்கக் காண் 

41. நகைத்தோர் யாரென நோக்கினான் ஆங்கே
வகையாய் சிக்கினாள் வஞ்சி - பகைத்தான்
பஞ்சவர் பத்தினியை; உள்ளில் வளர்த்தான்
வஞ்சத்தை நெஞ்சில் வலிந்து 

42. பஞ்சவர் கொண்ட பலவகைப் புகழதும்
நெஞ்சினைக் கொன்றிட , நஞ்சொத்தோன் -மஞ்சுசூழ் 
பாண்டவர் நாட்டை பார்த்த சுயோதனன்
மாண்டவன் ஆனான் மனதளவில் காண்டவ
காடதும் நாடாகக் கண்டெரி  உள்ளத்தான்
வீடதும்  சேர்ந்தான் விரைந்து
****



No comments:

Post a Comment