Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -008

திருதராட்டிரன் சகுனியிடம் வெகுண்டு அறம்  உரைத்தல்

95
கள்ளச் சகுனியுரை கண்ட அரசனும் 
பிள்ளையை நாசம்செய் பேய்தான்நீ -வெள்ளத்தில்
மாண்டுவிழும் புல்போல், மடையனே நம்வலிமை
பாண்டவர் முன்தான் பார். 

97
சோதரர் தம்மிடையே சோதனை இல்லையடா
சீதரன் அத்தருமன் சீலத்தால் ஏற்றமுற்றான்
காதங்கள் தள்ளியும்தன்  கற்பிலவர் மேல்வந்தார் 
பாதகனே சற்றதைப் பார் 

97
சிறுவயது நாள்முதலாய் சீற்றக் கொடுமையுடன்
உறுபகையும் உள்ளத்தில் ஓங்க, -மறுத்தான்
அவருரிமை மைந்தன், அவனுக்கு   சொல்லலைநீ
தவறதனை  தன்மையுடன் தான். 

98
மன்னவர்க்கே நீதிசொல்ல மாமன்நீ 
வன்னமாய் வார்த்தை வளைக்கின்றாய் வஞ்சத்தால்
முன்னம்  மலைமோதி மண்குடம் உய்ந்ததென்று
சொன்னகதை உண்டோ சொல்

99
தீதிவன் செய்ததை சிந்தையில் வைத்திடாதென் 
மீதிலன்பு மிக்கிடும்  மைந்தர்மேல் மோதிடென்று 
சூதினால் தீதிழைத்தால் தீயென தீய்த்திடுவர்!
வாதிதில் உண்டோ விளம்பு 

100
கண்ணனுக்கு அர்க்கியம் கண்டுனக்(கு)  என்னகுறை
மண்ணில் அவனைப்போல் மற்றோரைக் கண்டதுண்டோ
வண்ணச் சிறகணிந்த மாதவன் போலந்த
விண்ணிலும் உண்டோ விளம்பு 

101
அண்ணன் தம்பியருள்  அந்நியர்போல் சற்காரம்
பண்ணுதல் நன்றோ பகரென்று பல்விதமாய்
வண்ணமாய் சொன்னான் வலிந்து.  

102
முதுமொழி முன்னோர்சொல் நல்மொழி உண்ணி
விதுரன் தமையன்  விளம்ப -மதுமொழியால் 
பட்டறிவும் தம்பியின் பாடமும் கண்ணாக்கிச்
சுட்டினான் சொற்களைத் தோய்த்து

102
கல்லார்க்கு கற்றோர் கனிந்து இயம்பும்சொல்
புல்லோர் மனதில் புகுந்திடுமோ -வல்லானும்
மன்னவனின் சொற்கள் மனதில் வெறுத்ததில்
இன்னாமொழி ஏற்றான் இசைந்து. 

104
மருந்துகொள் என்று மகவிடம் சொன்னால்
உருண்டு அழும்குழந்தை உள்ளம், சலங்கொண்டு
கண்ணழ தாயினைக் காய்வது போலானான்
கண்ணிலான் பெற்ற கன்று 

No comments:

Post a Comment