Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் -007

திருதராட்டிரன் சொல் கேட்டு துரியோதனன் வெகுளுதல்.

82
தந்தை மொழியால் தனயன் முகம்கருத்து
வெந்தழலாய்  மாறினான்,  வேந்தன் மொழியெதிர்த்து
கண்சிவந்து காய்ந்தான்; கனலுடன் நூற்றுவரில் 
​​முன்னவன் நின்றான் முனிந்து

83
உன்பிள்ளை நானன்றோ உன்னன்பு  ஏனில்லை
பின்னமாய்   நாட்டைப்  பிரித்தனை -இன்னலுக்குத் 
தந்தையும்  நீயோ? தயையுமென் மீதிலா
விந்தையை நீதான்  விளம்பு

84
என்று பலவாய் இளவலும் வாய்வீச
குன்றிய கோவின் குமுறும் நிலையதனை,
கன்றும் மனத்தினனக்   காவலனைக் கண்டவர்    
அன்று கலங்காதார்  யார்

சகுனி துரியோதனனை தடுத்துப் பேசுதல்

85
தந்தைமொழி கேட்டுத்தன்  சிந்தை இழந்தமகன்
தன்னை மறந்துகடுஞ் சொல்லாய் புலம்பிடவே;
அன்பாய் சகுனியவன் ஆறுதல் சொல்லிநின்றான்
மன்னன் மனத்தை அறிந்து. .
86
கொடுஞ்சரம் போன்றவன்  கொட்டிய சொற்கள்
தடுத்தல் வேண்டி சகுனி உரைத்தான் 
கடுஞ்சொல் வேண்டாம் கவலைதனை நீட்ட
சுடுஞ்சொல் போலுண்டோ சொல்

87
​மிஞ்சும் இளவலால் மிஞ்சிடும் காரியமென்(று)
அஞ்சினான் மாமன் அடுத்துதன் - கொஞ்சுமொழி 
கொண்டங்கு பேசினான் கொற்றவனைச் சாய்த்திட
​வஞ்சனையை வாக்கில் வளைத்து. 

88
பின்சொல்வான் மாமன் பிரித்தாளும் சொற்களில்
மன்னவா நின்மகனை மன்றில்  இகழ்ந்தார்நின்
பின்னவனின் மக்கள் பேதமையால் உன்மகனை
உன்மத்தன் போல ஒழித்து

89 
முந்து மரியாதை முன்னவா நின்மகற்கு
தந்திலன் அந்தத் தருமனும் -பிந்தும் 
இடையனாம் கண்ணன் இயந்ததைக்  கொண்டான்
பயந்தநல் வாழ்வின் பயன். 

90
சிலையொத்த மங்கை சிரித்தாள் ஆங்கே
கொலையொத்தக் கூற்றாய்க்  கொடுநகையும் கண்டு 
வலையில்வீழ் வேங்கையென வாடிக் கனன்று 
சிலையென நின்றான் சினந்து

91
சீற்றம் தணிந்திடவும் சிந்தியாதோர் மாசுறவும்
போற்றியோர் தூற்றி பொசுக்க,மனம் -மாற்றிட 
பாண்டவர் செல்வத்தை  பாரினது பாரமதை
வேண்டிமகன் நின்றான் விரைந்து. 

92
பலநூறு யானை பலம்கொண்ட  மைந்தன்
நிலமகளைக் கேட்டான் நினைந்து -பலவானே
உந்தனது செல்வம் உயர்ந்திடவாய் சொல்லுகிறேன்
சிந்தையில் ஏற்பாய் சிறிது

93
 ஆண்டவரைத் தாக்கி அரசைநாம் கொள்வதறம்
காண்டவ ராஜ்ஜியம் காண்போம்நாம், பார்த்தனை
காண்டகு வீமனை கண்டுமனம் அஞ்சாது மோதிட 
பாண்டவரை சாய்ப்போம் பகைத்து

94
ஆயதுணர் ஆண்தகையே அன்னவர்தம் தோளுயர்ந்தால்
பாயுமவர்  சீற்றமென பல்லுரையால் -மாயச்
சகுனிதன்  தந்திர சாகச சூழ்ச்சித் 
தகுதியைக் காட்டினான் தாழ்ந்து.

No comments:

Post a Comment