துரியோதனன் வெகுண்டு விதுரனை ஏசுதல்
149 ( அ)
வயிறை யெமக்கும் மனதை யவர்க்கும்,
துயரம் எமக்கும் சுகத்தை யவர்க்கும்
இயம்பும் மனதை எளிதில் அறிவோம்
மயங்கோமுன் மாயவுரை கண்டு.
திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்
149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும்
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ நம்மையும்
வென்று நடக்கும் விதிவழி நாம்செல்வோம்
என்றனன் மன்னன் இயைந்து.
150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி
உந்தும் நிலையில் உலைந்து
விதுரன் இந்திரபிரஸ்தம் அடைதல்
151
போருக்கு அச்சாரம் போடும் விதிநொந்து
தேருள் அமர்ந்து வருந்தியே தேம்பினன்
தாருடை வேந்தன் தருமன் நகர்நோக்கி
சாரும் பொழுதினில் தான்
இந்திர்பிரஸ்தத்தின் வளமைக் காணுதல்
152.
நால்வகைச் சேனை நடக்கப் பெருவீதி
கால்கை முளைத்த கருங்குன்றம் போலானை,
சூல்கொள் மரங்கள் சூழ வளர்ந்தோங்கும்
சாலைகள் தானமைந்த நாடு
153
ஓதிடும் பாடங்கள் ஓடிசெவி உள்நுழையும்
சோதிக்க எண்ணி தொடரப் பயிலரங்கில்
மோதிடும் ஆயுதங்கள் மொத்தமாய் போர்மன்றில்
மோதிட யார்வருவார் முன்
154
நீலமுடி கொண்டு நீள்வரையின் மீதினில்
கோலமுறு பன்மரங்கள் கோகிலம்போல் கார்முகில்கள்
சாலம் பலகாட்டும் சந்திரனும் சாய்ந்துறங்க
ஞாலத்தைக் காத்திடும் நாரணனன் போலுயர்ந்து
சாலங்கள் காட்டும் தழைத்து
155
கொண்ட(து) அனைத்தும் குறைவின்றி கொடுத்திடும்
தண்ணெழில் கொஞ்சிடும் விண்நகரை மிஞ்சிடும்
நீண்டு விரியும் நியமங்கள் பேரழகாய்த்
தீண்ட மகிழ்ந்தான் சிறிது.
156
பாரத நாட்டினைப் பாரிகழ பல்வகைச்
சோரமுடைச் செய்கை சுயோதனன் சொல்கிறான்
பாரதைத் தூதென்று பாவியேன் செய்கிறேன்
கோரவிதி தன்னில் குலைந்து
பஞ்சவர் மாளிகை பார்
157.
அந்தி மறைந்திடும் அந்நேரம் மாளிகை
முந்தி அவன்கண் முன்னிட சந்திக்க
வந்த விதுரனைக் கண்ட தருமனும் நல்லதாய்
தந்தான் வரவேற்புத் தான்
158
விதுரனை தானும் எதிர்கொண்ட ஐவர்
சதுரங்கச் சேனையுடன் தான்முந்திச் சென்றார்
எதிர்கொண்டு வந்தோர்க்கு ஏந்தல் விதுரன்
மதுர மொழிசொன்னான் மற்று
159
தங்கப் பதுமையென தையலுடன் ஐவரும்
அங்கவன் தாளை அடிபணிய அங்கம்
குளிர்ந்துநல் வாழ்த்துகள் கூறினான் அன்பினில்
துளிர்க்கும் கண்ணீர் துடைத்து.
160
குந்தியைக் கண்டங்கு கோமகன் தாள்பணிந்து
வந்தனை செய்தான் வளைந்து
விதுரன் தூதுரைத்தல்
161.
வாழ்த்தினன் அண்ணனின் வாழ்த்தை வழங்கினன்
ஏழ்மை மனத்துடன் ஐவரை நோக்கினன்
தாழ்த்தினன் தன்தலை, தீதுடை தூதுரைக்க
வாய்த்த விதியை மதித்து.
162
ஆழ்கடல் தன்னில் அமிழ்ந்திடும் ஓடம்போல்
ஆழ்ந்தனன் சிந்தையில் ஆவி கலங்கினன்
தேய்ந்தது நெற்றியும் தேய்த்த விரல்களால்
காய்ந்தனன் உள்ளம் கனன்று
163.
வருவது யாவும் வருந்திடப் போமோ?"
மருகும் மனதை மனத்தால் ஒதுக்கி
செருதரு செய்கையை செய்ய முனைந்தான்
தருமத்தின் முன்மகன் தான்.
No comments:
Post a Comment