தருமனின் தீர்மானம்
--
178
தருமனும் தன்னிலை சற்று நினைந்து
வருவினை ஏதும் வழியில் நில்லா
கருமங்கள் வந்தால் கடனென்று ஏற்போம்
தருமமிது என்றுரைத் தான்
179
தந்தைசொல்ல சிற்றப்பன் தூதுவரத் தான்கண்டு
சிந்தையில் சீற்றம் தவிர்த்திட்டான் - முந்தை
சிலைராமன் செய்கை சிறப்பதனைச் சொல்லி
தலைமகனும் ஏற்றான் தகைந்து.
180
தம்பியாம் வீமனிடம் சொன்னான் தருமனும்
நம்பிநாம் செல்வதே நன்று, நம்முடன்
தம்பியரும் தாரகையும் அத்தினம் செல்லவழி
செம்மையாய் செய்வாய் சிறந்து.
வீமன் திகைத்துச் சொல்லுதல்
181
வீமன் விசயனிடம் வியந்துரை சொல்லுகிறான்
மாமன் மருகனுடன் மர்மசதி செய்கிறான்
தாமதம் இன்றிநாம் தம்படை கொண்டங்கு
கோமகனைச் சாய்ப்போம் குலைத்து
182
நெடுநாள் பகையடா, நெறியிலா மாக்கள்
கெடுமதி கொண்டு நமக்கு கொடுமையைக்
கூட்டினார் நாமதற்குக் கோடிட நம்மையும்
நாட்டினர் பழிப்பார் நகைத்து.
183
யாரிடம் தந்தை அவிழ்க்கிறான் பொய்களை
போரிடச் சென்று பகைதனைப் போக்குவோம்
பாரில் இவரொடு பாங்காய் வாழ்ந்திட
நேரிடும் வாழ்வோ நெருப்பு
தருமன் மறுத்துரைத்தல்
184
வீமன் உரைகேட்டு விம்மிடும் தம்பியர்
தாமதை ஆமென்று தம்முரைச் செப்பினர்
தாமரைக் கண்ணன் தருமன் மறுத்திட்டான்
தாமதம் ஏதும் தவிர்த்து
185
அன்புடை தம்பியர் அவ்வகை தன்னிடம்
வன்புமொழி பேசும் வகையினர் ஆனதை
மன்னனும் கண்டதும் மாண்புடன் கூறினான்
பித்தனல்ல நானிங்குப் பார்
186
முன்பு நமக்கவர் மூட்டிய கேட்டினை
என்றும் மறந்திலேன் என்செய்ய இத்தனையும்
முன்னின்று நம்மை முடுக்கும் வல்விதிதான்
பின்நின்று செய்யும் பிழை
187
தந்தையவன் சொன்னால் தருமம் பிறிதுண்டா
முந்தை இராமன் முனைந்த செயலதுவே
சிந்தை மயங்கி சீதரன் சொல்லைநாம்
பிந்தி மறுத்தல் பிழை.
188
என்றுபல நீதிகளை ஏந்தல் தருமனும்
சென்றவன் தாளதை சேர்ந்தனர் தம்பியர்
குன்றின் விளக்காய் அறவுரைக் கூறினாய்
என்றார் அவருன் இசைந்து
189.
துன்பம் எமக்கென்றோ தூயவனே யாமுரைத்தோம்
அன்பு மிகுந்திடவே அண்ணே உனையெதிர்த்தோம்
மன்னனே மன்னிப்பாய் மாண்பிலா எங்களின்
வன்புமொழி தன்னை மறந்து.
190.
உன்னைப்போல் உலகத்தின் நீதிதனை யாரறிவார்
உன்வழி கண்டேயாம் உய்ந்திடுவோம் - மன்னவா
இன்பதுன்பம் யாவும் இனியுந்தன் பாதையில்
முன்னவனே வருவோம் முனைந்து.
No comments:
Post a Comment