Wednesday, January 15, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -014

விதுரனை தூதுக்கு அழைத்தல். 

142

மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்
இதுவரை நீதிசொன்ன  தன்நிலைக் கொன்று
முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்
விதுரனைத் தூதாய் விடுத்து.

143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான்  சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்


144

வஞ்சனை மாமனின் வஞ்சகமும்  உள்ளதென்று  
பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும் 
அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும் 
மிஞ்சிடா தென்று மிழற்று. 


( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் ) 

145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்
என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான் 


விதுரன் வேதனையால் சொல்லுதல்

146 
போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்
ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்
பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்
மூச்சிலும் உண்டே முரண்

147
எத்தகு வார்த்தை  எளிதில் இயம்பினாய் 
மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர் 
கற்றதை  காற்றில் கரைத்தனையோ முன்னவனே 
உற்றதை நீயும்  உரை 

148
வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே
கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா
பஞ்சவரைச்  சூதில் பகடையால் வென்றபின்னர்
எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?

No comments:

Post a Comment