Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -004

அத்தினாபுரம்  சபையின் காட்சி
-------
43
கன்னங் கரியதுவாய் காட்சிக்(கு) இனியதுவாய்
வன்னத் திருநதியின்  வாச மருங்கினில்
பொன்னில் இழைத்த  புகழ்மாடச் சீரழகை
எங்கனம் சொல்வேன் இயம்பு 

சபையில்  திருதராட்டிரன், துரியோதனன், விதுரன், பீஷ்மர், சகுனி, கர்ணன் முதலானோர் இருத்தல்
-----

44
தந்தைசொல் கேளாத் தனயனுடன்,  தம்பியும்
தந்தைக்குத் தந்தையாம் வீட்டுமனும் சொற்திறத் 
தந்திர மாமன் சகுனியொடு கர்ணனென 
மன்னர் பலருடை  மன்று. 

துரியோதனன் பொறாமை
-+++
45
எண்ணிலாச் செல்வங்கள் ஏற்றமுடன் கொண்டவன்
கண்ணிலான் ஈன்றெடுத்த காவலன்   தன்னிலை
எண்ணிலான் ஏழையென ஏங்கிய காரணத்தை 
எண்ணி இயம்புவேன்  இங்கு 

46
தருமனின் வாழ்வுத் தரத்தினைக் கண்டான் 
பொருமி மனதில் பொறாமை - உரக்கவே
துஞ்சிடும் போதில்  சுகமெலாம்  போகுமென்(று)
அஞ்சினன் வெஞ்சினன் ஆம்

சகுனியிடம் சொல்வது
47
காண்டகு வில்லுடை காண்டீபன் வாழ்ந்திருக்க
மாண்டகு வீமனின் மார்பதில் வீரமதைக்
காண்கையில் நானுமிங் காள்வ தரசாமோ
பாண்டவரங்(கு) ஆனார் பெரிது

48
வேந்தர்க்கு வேந்தனென வேள்வி முடித்திட்டான்
ஏந்திழையின் அண்ணனும்  ஏனோ துணைநின்றான்
பாந்தள்வாய்த் தேரை பதைப்பினை நானடைந்தேன்
சிந்தைக்குள் தீயின் சிலிர்ப்பு.

49
ஆயிரம் மன்னர் அவன்தாள்  பணிந்தங்கு
ஆயிரமாய் பொன்பொருள் அன்பென்று  தானளித்தார்
ஆயிரம் தேள்விடத்தை அன்றே உணர்ந்திட்டேன்
நோயுற்றோன் கொண்ட நிலை.

50
மந்தையெனக் கால்நடைகள் மங்கா ஒளித்தங்கம்
எந்தையும் கொண்டதில்லை ஏனடா மாமனே
கந்தைக்கும் என்னிடத்தில் கையேந்தி நின்றவர்கள்
எந்தைக்கும்  ஏற்றமுற்ற(து) ஏன்?

51
பழவினை என்பான் பாண்டவரில் மூத்தோன் 
கிழவியெனப் பேசும் கிளியாய் -  உழக்கில் 
உலகமதைக் காணும் ஒருவனோ ஆள்வது 
தலைவனாய்  தாரணியைத் தான். 

52
தம்பியர் வல்லமையால் தாரணி ஆள்கின்றான்
உம்பரும் வந்து  தொழுதல் உவப்பாமோ
இம்பரில் முன்நிலை யானறிவேன் சொன்னாலோ
வம்பில் முடியும் வழக்கு.

53.
தருமனவன் வேள்விசெய்தான் தம்பிவலி தன்னால்
பெருமைபல பெற்றான் நிலத்தில்  மாமா
பொறுக்கலையென் உள்ளம் புவியோரும் ஒப்பார்
தருக்கமிலாச் செய்கை தனை

54
உலகப் பெருநிதியை ஓரிடத்தில் கண்டு
கலங்கும் மனதினனாய் காண்கிறாய் என்னை
துலங்கும் வழியறியேன் துன்பமும் என்னுள்
சலங்கையுடன்  ஆடும் சதிர்.

55
மணிபல ஈந்தனர்  மன்னர்கள் ஆங்கே
துணியில் பலவகை; துய்க்க - அணியணியாய்
முத்தும் பவழமும்அம்  மூடனுக்கு தந்தனரே
புத்தி அவர்க்குண்டோ புகல் ?

56
குவியலாய் தங்கமும், குன்றாத வைரம்
தவிக்கிறேன் கண்டதால் தாளா தணலெழும்பி  
மூச்சும் சிறிதடங்க  மாமனே ஓயாவென் 
பேச்சும் அடங்கியதே பின்

57
தலைவன் இவனென்று சாற்றினர் மன்றில் 
கலைந்திடா கூட்டம் களிக்க -  சிலையென
நின்றதுடல், வெந்துமனம் நீர்த்து; நிலையின்றி 
நின்றேன்  அவற்றை நினைந்து 

58
பாரில் உயர்ந்தவர் பாண்டவர் என்றசொல்
பாரினில்   யாரும்   பகர்ந்திட  - காரிருள்
சூழ்ந்ததென் எண்ணத்தில்; சுற்றம் மறந்திட்டேன்
பாழும் கவலையினால் பார்

59
ஏதுசெய்வேன் மாமனே என்னுயிர் போகுதே 
ஊதுலைபோல் உள்ளமது வாடமனம் - வாதுசெய்து
என்னை வதைக்குதே  என்று முகம்கருத்து
முன்னவன் நின்றான் முனிந்து. 

60
வெஞ்சமர் வீரர்முன் எக்களித்த ஏந்திழையும்
நெஞ்சிலே ஊழி நெருப்பினைத்  தூண்டினள்
துஞ்சவும் அஞ்சும் துயரினில்  நெஞ்சமும்
பஞ்சவர் பத்தினியால் பார் 

61
யாதே இழப்பினு(ம்) என்மாமனே எந்தனுக்கு
தீதேதான் நேரிடினும் தீதில்லை, - தீதவற்கு
வேண்டுகிறேன், பாண்டவர்தாம் வேருடன் வீழ்ந்திடத்
தூண்டு அரசைத் துளைத்து. 

62
என்றிவை சொல்லியவன் ஏழையாய் காய்கின்றான்
கன்றிழந்த தாய்போல் கவலை மிகக்கொண்டான்
குன்றெனும் தோளும் குலைந்து தரைசேர்ந்தான் 
வென்ற விதிக்குள் வீழ்ந்து.

No comments:

Post a Comment