பாண்டவர்கள் அஸ்த்தினாபுதம் செல்லுதல்
191
பாங்காய் பரிசில்கள் பல்வித ஆடையென
ஆங்கவர் கொண்டு அணிவகுத்து மங்கையுடன்
தீங்குடை அத்தி திசைநோக்கி தம்நகர்
நீங்கினார் தன்சொல்லில் நின்று.
192
நாச மனமறியா நல்லோர்கள் நம்பியே
நீசர்மனை நாடி நீள்வழி செல்கையில்
வாசலுக்குச் சென்று வழிபார்த்து காத்திருக்கும்
வேசற(வு) ஊட்டும் விதி.
( வேசறவு - துயரம் )
193
பாய்ந்திடும் தேரினில் பாரினைச் சுற்றியே
காய்த்திடும் வெய்யோன் கரங்களைத் தாழ்த்தினான்
ஓய்வுக்கு நேரமது உற்றதால் மாலையில்
சாய்கிறான் பொற்பில் தணிந்து
194
மஞ்சள் கிரணங்கள் மானெழில் காட்டிட
பஞ்சவர் ஐவரும் பயணம் தொடர்கிறார்
செஞ்சுடர் காட்டிடும் செவ்விய வானத்தின்
பஞ்சவர்ண ஜாலங்கள் பார்த்து.
பாண்டவர் அத்தினாபுரம் அடைதல்
கலைவாணி துதி
வேணும் மொழியனைத்தும் வேண்டும் வகையில்கலை
வாணியருள் நீயே வழங்கு
195.
இரவும் பகலும் இனிதே கழிய
அரவக் கொடியொன் அரண்மனை சேர்ந்தார்
பரவியது சேதி பஞ்சவரைக் காணல்
வரமென வாழ்த்திடும் மாநகரின் மக்கள்
திரளென வந்தார் திரண்டு
196.
அத்தினம் சேர்ந்தனர் ஆரியர் பாண்டவர்
தத்தி எழுந்தன தாங்கொனாக் கூட்டமும்
எத்திசை நோக்கினும் எங்கெங்கும் மாந்தராம்
அத்தனை மக்கள் அதுவரை எங்கிருந்தார்
இத்தனைப் பேரும் இயம்பு
197
வந்தவர் நல்லிசை வாசித்து ஆடினர்
சிந்தை மகிழ்ந்திட சீராய்ப் பார்ப்பனர்
மந்திர கீதங்கள் பாட மகிழ்ந்தனர்
செந்திரு நாட்டினர் சேர்ந்து.
திருதராட்டிரன் உள்ளிட்ட பெரியோர்களை வணங்கி மகிழ்தல்
198
மன்னவன் மாளிகை வந்தங்கு சேர்ந்தனர்
பொன்னரங்கில் தந்தையைப் போற்றி வணங்கினர்
அன்னவனும் ஆசிதர தாத்தனாம் வீட்டுமனின்
பொன்னடித் தாழ்ந்தார் பொலிந்து
199
குந்தியுடன் காந்தாரி கோவில் அடைந்தனர்
சுந்தரி பாஞ்சாலி சூழ வணங்கினர்
வந்தவர் யாவரையும் வாழ்த்தி மகிழ்ந்தனள்
அந்தகள் ஆன அவள்
200.
உற்றவர் தந்த உபசாரம் ஏற்றனர்
கொற்றவர் ஐவரும் கோதிலா உள்ளமுடன்
மற்றுமவர் தங்கிடும் மாளிகை சேர்ந்தனர்
சுற்றம் உடன்வரச் சூழ்ந்து
பாண்டவர் மண்டபம் காண வருதல்
201
பாணர்கள் நல்லிசை பாங்காய் எழுப்பிட
ஆணிப்பொன் பட்டாடை ஆங்கவர் பூண்டனர்
நாணமிலா நூற்றுவர் நாயகனின் மண்டபம்
காண விரைந்தனர் காண்
மண்டபத்தில் துரியன் உள்ளிட்ச பலர் சேர்ந்திருத்தல்
202
வீட்டுமன் சார்ந்து விதுரனும் மன்னனும்
நாட்டுறை நல்லமைச்சர் மற்றுபல நாட்டினர்
கேட்டினை ஊட்டும் கெடுமதியான் நண்பர்கள்
கூட்டமாய் கொண்ட கொலு
203.
புன்தொழில் செய்ய புவியில் இணையிலா
மன்னன் சகுனியுடன் மன்றில் பலதீயோர்
குன்றிய உள்ளத்தார் கூடிக் குலவிடும்
மன்றினைக் கண்டார் மலைத்து.
சகுனி சூதுக்கழைத்தல்
204
சொல்லுகிறான் மாமனும் சொற்திறம் கூட்டியே
வில்லிலும் வேலினாலும் விண்ணையே வென்றவரே
வல்லுறு சூதிலுன் வன்மையை கண்டிட
வெல்லும் மறவர்கள் வேட்கை உடையவராய்
இல்லத்தை சேர்ந்தார் இசைந்து.
தருமன் மறுத்தல்
205
தருமனும் தன்னிலை யாதென்(று) இயம்பினான்
பெருமையிதில் இல்லையறப் பெற்றியும் இல்லை
வரும மனத்தாயெம் வாழ்வை குலைக்க
வரும்செயல் வேண்டாம் விலக்கு
( வருமம் - வன்மம்)
சகுனி தூண்டுதல்
206
வஞ்சக மாமன்வாய் விட்டு நகைத்தான்
அஞ்சல் அழகோ? உன்னிடம்பொன் இல்லையோ?
பஞ்சவரின் மூத்தவனே பாரோர் இகழ்ந்திடும்
கஞ்ச மனமோ? கவறினில் பந்தயமாய்
கொஞ்சம் திரவியத்தைக் கொட்டு
207
நிச்சயம் நீவெல்வாய் வெற்றி நினக்கியல்பு
அச்சமும் வேண்டா அரசே அரங்கிலே
கச்சையுடன் காய்களைக் காண்பீர் தயங்காது
மெச்சி வருவீர் விரைந்து
No comments:
Post a Comment