Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -006

சகுனியுடன் துரியோதனன்  திருதராட்டிரனைக் காண விரைதல் :

69
மண்ணாசைக் கொண்ட மருகனும் முன்விரைந்து  
மந்திரியாம் மாமனுடன் மன்றிற்குப்  புறப்பட்டான்
தந்திரப் பேச்சாலே தன்னாசை சொல்லிவிட
கண்ணில்லாக் கோமகனைக்  கண்டு.

70
முன்னவன் பீஷ்மர், முனியாசான், நல்விதுரன்
மன்றத்தில் வீற்றிருக்கும்,  மன்னர் பலருடைய 
மன்னுபுகழ் மன்றத்தை மாமனுடன் சென்றடைந்தான் 
விண்ணுலகம் போலிருக்கும் வீடு

சகுனி பேச ஆரம்பித்தல் :

71
 துரியன் எண்ணத்தை துர்குணத்தோன்  தானும் 
விரிவாய் பகர விரும்பி -  செரிவாய் 
விரித்தான் வலையை விளம்பினான் மன்றில் 
துரியனின் மாமன் துணிந்து.

71
முன்னவன்முன் சென்ற மயக்குமொழி மாமனும்
மன்னவா கேளுந்தன் மைந்தன் நிலைதனை 
கண்ணுறக்கம் வாரா கவலையில் தானாழ்ந்து 
உண்ணாது நின்றான் உழன்று 

72
மாமனே; என்னருமை மன்னனே; என்பேச்சை 
தாமதம் அற்று தயவுடன்கேள்  நின்மகனும் 
வாமம் இழந்தான் வடிவிழந்தான்,  அய்யாதன்
நாமம் மறந்தான் நலிந்து

73
உண்ணிலன், நீண்டு உறங்கிலன் உற்றதோர் நண்பரை சேர்ந்திலன், நாரியரைக் - கண்டிலன் இன்னுமது ஏனென்(று) இயம்பிலன்; கேட்டிடு ஆண்டகையே நீயும் அறிந்து

சகுனி சொல்வதை கேட்டு திருதராட்டிரன் மனம் வருந்துதல்

74
என்று சகுனி இயம்பிடக் கேட்டலும்
மன்னன்தன் உள்ளம் மருகினான்  - அந்தோ,
தயக்கமும் ஏனடா தந்தையிடம் மகனே
துயரத்தை தூரே துரத்து 

75
சகுனியின் வார்த்தையை சற்றும் சகியேன் 
மி​குதியான செல்வம் மலைபோல் உண்டு
தகுதி உடையோன் தரணியில் நீயன்றோ?
தகுமோடா இச்செயல் தான் ?​​​​​

76
இன்னமுதே முன்னவனே இன்றுனக்கு ஏக்கமேன்
தன்வினையோ தாளாத முன்வினையோ முற்றாமுன்
என்கண்ணே  என்மகனே என்னிடம்சொல் யாதென்று 
இன்றேவுன் எண்ணம் உரை 


துரியோதனனுக்கு சமாதானம் உரைத்தல்
​​​​
77
​என்னரும் முத்துக்கள் எத்தனையோ நல்மணிகள்
தின்னக் கனிகள் திகட்டாநல் - இன்னமுதும்
உன்னைப்போல் யாருமே உய்த்ததில்லை இம்மொழியை 
இந்திரனும் ஏற்பான் இசைந்து

78
நெஞ்சுரம் கொண்ட நம்பியர் நூற்றுவரும்,
பஞ்சவரும் உன்பக்கம், பார்த்தனொடு  வீமனுண்டு
அஞ்சிடுவர் யாரும்  உனைபகைக்க மைந்தாஉன் 
நெஞ்சில் நடுக்கமதை நீக்கு

79
உன்னை எதிர்த்து உயிர்கொண்டாய் ஆருளரோ
என்னை மதித்து இயம்பிடு -என்னவனே
நீகொண்ட செல்வங்கள் நீடுலகில் யார்கண்டார்
தீகொண்ட  நெஞ்சம் திருத்து 

80
பாண்டவர் செல்வமதை பாராது விட்டுவிடு
ஆண்டிடு நின்னரசை அன்புடன்  -காண்மகனே
சோதரர் தானவரை  சொந்தமென ஏற்றுவீண்
போதனைகள் தள்ளு புரிந்து. 

81
இந்திரனும் காணாத இன்னமுதம் தானுண்டு
இன்னுமேன் சோகம் இயம்புவாய் என்றுறைத்த
தந்தையுரை கேட்டு தனயன் மனம்நொந்து
விந்தையிது என்றான் வியந்து


No comments:

Post a Comment