Sunday, January 19, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -018

பாண்டவர்கள் அஸ்த்தினாபுதம் செல்லுதல்


191
பாங்காய் பரிசில்கள் பல்வித ஆடையென
ஆங்கவர்  கொண்டு அணிவகுத்து மங்கையுடன்
தீங்குடை  அத்தி திசைநோக்கி தம்நகர் 
நீங்கினார் தன்சொல்லில் நின்று.

192
நாச மனமறியா  நல்லோர்கள்  நம்பியே
நீசர்மனை நாடி நீள்வழி செல்கையில் 
வாசலுக்குச் சென்று வழிபார்த்து காத்திருக்கும் 
வேசற(வு) ஊட்டும்  விதி. 
( வேசறவு - துயரம் ) 

193
பாய்ந்திடும்  தேரினில்  பாரினைச் சுற்றியே
காய்த்திடும் வெய்யோன்  கரங்களைத் தாழ்த்தினான்
ஓய்வுக்கு நேரமது உற்றதால்  மாலையில் 
சாய்கிறான் பொற்பில் தணிந்து

194
மஞ்சள் கிரணங்கள் மானெழில் காட்டிட
பஞ்சவர் ஐவரும் பயணம் தொடர்கிறார்
செஞ்சுடர் காட்டிடும் செவ்விய வானத்தின்
பஞ்சவர்ண ஜாலங்கள் பார்த்து. 

பாண்டவர் அத்தினாபுரம் அடைதல்

கலைவாணி துதி

வேணும்  மொழியனைத்தும்  வேண்டும் வகையில்கலை 
வாணியருள்  நீயே  வழங்கு

195.

இரவும் பகலும் இனிதே கழிய
அரவக் கொடியொன் அரண்மனை சேர்ந்தார்
பரவியது சேதி பஞ்சவரைக் காணல்
வரமென வாழ்த்திடும் மாநகரின்  மக்கள் 
திரளென வந்தார் திரண்டு 


196.
அத்தினம் சேர்ந்தனர் ஆரியர் பாண்டவர்
தத்தி எழுந்தன தாங்கொனாக் கூட்டமும்
எத்திசை நோக்கினும் எங்கெங்கும் மாந்தராம்
அத்தனை மக்கள் அதுவரை  எங்கிருந்தார்
இத்தனைப் பேரும் இயம்பு


197
வந்தவர் நல்லிசை வாசித்து ஆடினர்
சிந்தை மகிழ்ந்திட சீராய்ப் பார்ப்பனர் 
மந்திர கீதங்கள் பாட மகிழ்ந்தனர் 
செந்திரு நாட்டினர் சேர்ந்து. 

திருதராட்டிரன் உள்ளிட்ட பெரியோர்களை வணங்கி மகிழ்தல் 

198
மன்னவன் மாளிகை வந்தங்கு சேர்ந்தனர்
பொன்னரங்கில் தந்தையைப் போற்றி வணங்கினர்
அன்னவனும்  ஆசிதர தாத்தனாம் வீட்டுமனின்
பொன்னடித் தாழ்ந்தார் பொலிந்து

199

குந்தியுடன் காந்தாரி கோவில் அடைந்தனர்
சுந்தரி பாஞ்சாலி சூழ வணங்கினர்
வந்தவர் யாவரையும் வாழ்த்தி மகிழ்ந்தனள்
அந்தகள்  ஆன  அவள்

200.
உற்றவர் தந்த உபசாரம் ஏற்றனர்
கொற்றவர்  ஐவரும் கோதிலா உள்ளமுடன்
மற்றுமவர் தங்கிடும் மாளிகை சேர்ந்தனர்
சுற்றம் உடன்வரச் சூழ்ந்து


பாண்டவர் மண்டபம் காண வருதல்

201
பாணர்கள் நல்லிசை  பாங்காய் எழுப்பிட
ஆணிப்பொன் பட்டாடை ஆங்கவர் பூண்டனர்
நாணமிலா நூற்றுவர்  நாயகனின்  மண்டபம்
காண   விரைந்தனர் காண் 

மண்டபத்தில் துரியன் உள்ளிட்ச பலர் சேர்ந்திருத்தல்

202
வீட்டுமன் சார்ந்து  விதுரனும் மன்னனும்
நாட்டுறை நல்லமைச்சர்  மற்றுபல நாட்டினர்
கேட்டினை ஊட்டும்  கெடுமதியான்  நண்பர்கள்
கூட்டமாய் கொண்ட கொலு  


203.

புன்தொழில்  செய்ய புவியில் இணையிலா
மன்னன் சகுனியுடன் மன்றில் பலதீயோர்
குன்றிய உள்ளத்தார் கூடிக் குலவிடும்
மன்றினைக்  கண்டார் மலைத்து. 


சகுனி சூதுக்கழைத்தல்

204

சொல்லுகிறான் மாமனும் சொற்திறம் கூட்டியே
வில்லிலும் வேலினாலும் விண்ணையே வென்றவரே
வல்லுறு சூதிலுன் வன்மையை கண்டிட
வெல்லும் மறவர்கள்  வேட்கை உடையவராய்
இல்லத்தை சேர்ந்தார் இசைந்து. 


தருமன் மறுத்தல்

205
தருமனும் தன்னிலை யாதென்(று) இயம்பினான்
பெருமையிதில் இல்லையறப்  பெற்றியும் இல்லை
வரும மனத்தாயெம்  வாழ்வை குலைக்க
வரும்செயல் வேண்டாம் விலக்கு 

( வருமம் - வன்மம்) 


சகுனி தூண்டுதல்

206

வஞ்சக மாமன்வாய் விட்டு  நகைத்தான்
அஞ்சல் அழகோ? உன்னிடம்பொன் இல்லையோ?
பஞ்சவரின் மூத்தவனே பாரோர்   இகழ்ந்திடும் 
கஞ்ச மனமோ? கவறினில் பந்தயமாய் 
கொஞ்சம் திரவியத்தைக் கொட்டு

207

நிச்சயம் நீவெல்வாய் வெற்றி நினக்கியல்பு
அச்சமும் வேண்டா அரசே அரங்கிலே 
கச்சையுடன் காய்களைக் காண்பீர்  தயங்காது  
மெச்சி வருவீர் விரைந்து 

பாஞ்சாலி சபதம் பெண்பாவில் -017

தருமனின் தீர்மானம்
--
178
தருமனும் தன்னிலை சற்று நினைந்து
வருவினை ஏதும் வழியில் நில்லா
கருமங்கள் வந்தால் கடனென்று ஏற்போம்
தருமமிது என்றுரைத் தான் 

179
தந்தைசொல்ல   சிற்றப்பன் தூதுவரத் தான்கண்டு 
சிந்தையில் சீற்றம் தவிர்த்திட்டான் - முந்தை
சிலைராமன் செய்கை சிறப்பதனைச் சொல்லி 
தலைமகனும்  ஏற்றான் தகைந்து. 

180
தம்பியாம் வீமனிடம் சொன்னான் தருமனும்
நம்பிநாம் செல்வதே நன்று, நம்முடன் 
தம்பியரும் தாரகையும் அத்தினம் செல்லவழி 
செம்மையாய் செய்வாய் சிறந்து. 

 வீமன் திகைத்துச் சொல்லுதல்

181
வீமன் விசயனிடம்  வியந்துரை சொல்லுகிறான்
மாமன் மருகனுடன் மர்மசதி செய்கிறான் 
தாமதம் இன்றிநாம் தம்படை கொண்டங்கு 
கோமகனைச் சாய்ப்போம் குலைத்து

182
நெடுநாள் பகையடா,  நெறியிலா  மாக்கள்
கெடுமதி கொண்டு நமக்கு கொடுமையைக்
கூட்டினார் நாமதற்குக்  கோடிட  நம்மையும் 
நாட்டினர் பழிப்பார் நகைத்து. 

183
யாரிடம் தந்தை அவிழ்க்கிறான் பொய்களை
போரிடச்  சென்று பகைதனைப் போக்குவோம்
பாரில் இவரொடு பாங்காய் வாழ்ந்திட
நேரிடும் வாழ்வோ நெருப்பு


தருமன் மறுத்துரைத்தல்

184
வீமன் உரைகேட்டு விம்மிடும் தம்பியர்
தாமதை ஆமென்று தம்முரைச் செப்பினர்
தாமரைக் கண்ணன் தருமன் மறுத்திட்டான்
தாமதம்  ஏதும்  தவிர்த்து

185
அன்புடை தம்பியர் அவ்வகை தன்னிடம் 
வன்புமொழி  பேசும் வகையினர் ஆனதை
மன்னனும் கண்டதும்  மாண்புடன் கூறினான் 
பித்தனல்ல நானிங்குப் பார்

186
 முன்பு நமக்கவர் மூட்டிய கேட்டினை
என்றும் மறந்திலேன் என்செய்ய இத்தனையும் 
முன்னின்று நம்மை முடுக்கும் வல்விதிதான்  
பின்நின்று செய்யும் பிழை

187
தந்தையவன்  சொன்னால் தருமம் பிறிதுண்டா
முந்தை இராமன் முனைந்த செயலதுவே
சிந்தை மயங்கி சீதரன் சொல்லைநாம் 
பிந்தி மறுத்தல் பிழை.

188
என்றுபல  நீதிகளை ஏந்தல் தருமனும்
சென்றவன் தாளதை சேர்ந்தனர் தம்பியர்
குன்றின் விளக்காய் அறவுரைக் கூறினாய்
என்றார் அவருன் இசைந்து


189.
துன்பம் எமக்கென்றோ தூயவனே யாமுரைத்தோம்
அன்பு மிகுந்திடவே அண்ணே உனையெதிர்த்தோம்
மன்னனே மன்னிப்பாய் மாண்பிலா  எங்களின் 
வன்புமொழி தன்னை மறந்து. 

190.
உன்னைப்போல் உலகத்தின் நீதிதனை யாரறிவார் 
உன்வழி கண்டேயாம் உய்ந்திடுவோம் - மன்னவா
இன்பதுன்பம் யாவும் இனியுந்தன் பாதையில்
முன்னவனே வருவோம் முனைந்து.

Wednesday, January 15, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -016

திருதராட்டிரன் சொன்னதை விதுரன்  உரைத்தல்

164

வேள்வி முடிந்து வெகுநாள் ஆனதால் 
தோள்வலி மிக்கோர் சொற்கள்தாம் நித்தமும் 
காதினில் கேட்குதாம், கண்டழை  நீயென்று
மேதினி  ஆள்கின்ற வேந்தனும்  சொல்லிட 
தூதென வந்தேன் தொடர்ந்து

165
இந்திரன்  மண்டபமும் இங்குண்டு காணென
சுந்தரமாய் கட்டி எழுப்பினர் -தந்திர
மாளிகை; கண்டோர் புலனை மயக்கிடும்
கேளிக்கைக் காடதாம் கேள்.

167.
தங்க மயமாக தானுயந்த  மண்டபத்தை  
மங்கையுடன்   உங்களைக் காண அழைக்கிறான்   
அங்குநல் நாள்குறித்து ஐவரும் வந்தங்கு
தங்கிடவாய்  அன்பில் தழைத்து. 

168
மன்னவன் சொற்கள்தாம்  மற்றும் சிலவுண்டு
மன்றிலே சூதுடன் மாமனும் உன்னிடம்
பந்தயம் கோரும் பயமுண்டு ஆமிதனைச் 
சிந்தையில் கொள்நீ சிறிது. 


169
மரத்த மனமுடை  மாமனின் செய்கையால் 
தரம்கெட்ட மைந்தனோ .தார்வேந்தைத்  தூண்ட
உரம்கெட்ட வேந்தனும் உன்னிடம்  அனுப்ப
தரங்கெட்டு வந்திட்டேன்  தாழ்ந்து.

170
பதுமை எனவானான் பஞ்சவரின் மூத்தோன்
விதுரனின் வார்த்தை விழுங்கி , இதுதகுமோ
என்றயிர்த்தான், சொல்மயங்கி  இன்னலுற்றான் சிந்தையில் 
நின்றிடா எண்ணத்தில் நின்று.

தருமன் பதிலுரைத்தல். 
171

சிந்தை நடுங்கித் தருமனும் கேட்கிறான்
"எந்தையோ இவ்வுரை  ஏத்தினான்? நல்லோர்முன் 
கந்தையென  ஆகிட காண்பதற்கோ  நம்புகழும் 
விந்தை உலகில்யாம்  வீழ்ந்து"

172
நன்று  எமக்கென்றும் நாடிலன் சின்னவன்
மன்றில் சூதுண்டு வாவென்(று) அழைப்பதால்
எந்தையே ஏற்கமனம் ஆவதில்லை  என்றயிர்த்தான் 
சிந்தையில்  ஐயமதை சேர்த்து

173
முந்திய நாட்களில் முற்றாய் எமைவெறுத்து
தந்திரம் செய்தெமை சாய்க்கப் பார்த்ததை
தந்தைநீ  அறிவாய்  தரமிலான் செய்கையும் 
தந்திடு நல்லுரை தான் 

விதுரன் பதிலுரைத்தல்

174
அருமறை யாவும் அறிந்தோர் தவிர்ப்பர்
வெருட்டி மயக்கினான் வேந்தனை  மைந்தன் 
தருமங்கள் யாவும் தானுரைத்தேன்  அங்கு
வருந்தி இதற்கு மறுத்து


175
கல்லும் இரங்கிக் கலங்கும் வகையிலே
சொற்களைச்  சொன்னானென்  சோதரன்  -சல்லிப்பயல் 
மல்லுக்கு நின்றங்கு  மன்னனைச் சொற்களால் 
புல்லனும் மாற்றினான் புகுந்து 

176
இன்னுமென்ன சொல்லுவது? என்னிடம் மன்னவன்
சொன்னதைச்  சொல்லி;அவர் சூழ்ச்சியும் தானுரைத்தேன்.
பின்னவர் நால்வரின்  பேசு மொழிகேட்டு
உன்நிலை நீயும் உரை. 

177

தருமம் அறிந்தவன் சான்றோன் நீயும்
கருமம் இதுவெனக் கண்டு -வருகிற 
வல்வினை சற்றே மனதுணர்ந்து நீய்ந்தன்
சொல்லுக சொல்லில் சிறந்து. 

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -015

துரியோதனன் வெகுண்டு விதுரனை ஏசுதல்

149 ( அ)

வயிறை யெமக்கும் மனதை  யவர்க்கும்,
துயரம் எமக்கும் சுகத்தை யவர்க்கும்
இயம்பும் மனதை  எளிதில் அறிவோம் 
மயங்கோமுன் மாயவுரை கண்டு.  

திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்


149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும் 
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ  நம்மையும் 
வென்று  நடக்கும்  விதிவழி நாம்செல்வோம்
என்றனன்  மன்னன் இயைந்து. 

150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று 
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி 
உந்தும் நிலையில் உலைந்து


விதுரன் இந்திரபிரஸ்தம் அடைதல்

151
போருக்கு அச்சாரம்  போடும் விதிநொந்து
தேருள் அமர்ந்து வருந்தியே தேம்பினன்
தாருடை வேந்தன் தருமன் நகர்நோக்கி
சாரும் பொழுதினில்   தான்

இந்திர்பிரஸ்தத்தின்  வளமைக் காணுதல்

152.


நால்வகைச்  சேனை நடக்கப் பெருவீதி
கால்கை முளைத்த கருங்குன்றம் போலானை,
சூல்கொள் மரங்கள் சூழ வளர்ந்தோங்கும்
சாலைகள் தானமைந்த நாடு

153
ஓதிடும் பாடங்கள் ஓடிசெவி உள்நுழையும்
சோதிக்க எண்ணி   தொடரப் பயிலரங்கில் 
மோதிடும் ஆயுதங்கள்  மொத்தமாய் போர்மன்றில் 
மோதிட யார்வருவார் முன் 

154

நீலமுடி கொண்டு நீள்வரையின்  மீதினில் 
கோலமுறு பன்மரங்கள் கோகிலம்போல்  கார்முகில்கள்
சாலம் பலகாட்டும் சந்திரனும் சாய்ந்துறங்க
ஞாலத்தைக் காத்திடும் நாரணனன் போலுயர்ந்து
சாலங்கள் காட்டும் தழைத்து 


155

கொண்ட(து) அனைத்தும்  குறைவின்றி கொடுத்திடும்
தண்ணெழில் கொஞ்சிடும் விண்நகரை  மிஞ்சிடும்
நீண்டு விரியும்  நியமங்கள் பேரழகாய்த் 
தீண்ட மகிழ்ந்தான் சிறிது. 

156

பாரத நாட்டினைப் பாரிகழ பல்வகைச்
சோரமுடைச் செய்கை சுயோதனன் சொல்கிறான்  
பாரதைத் தூதென்று  பாவியேன்  செய்கிறேன்
கோரவிதி தன்னில் குலைந்து


பஞ்சவர் மாளிகை பார்

157.
அந்தி மறைந்திடும் அந்நேரம்  மாளிகை 
முந்தி  அவன்கண் முன்னிட சந்திக்க
வந்த விதுரனைக் கண்ட  தருமனும் நல்லதாய் 
தந்தான் வரவேற்புத் தான் 

158

விதுரனை தானும்  எதிர்கொண்ட ஐவர்
சதுரங்கச் சேனையுடன் தான்முந்திச் சென்றார்
எதிர்கொண்டு வந்தோர்க்கு   ஏந்தல் விதுரன்
மதுர மொழிசொன்னான் மற்று 


159
தங்கப் பதுமையென தையலுடன்  ஐவரும் 
அங்கவன் தாளை  அடிபணிய அங்கம்
குளிர்ந்துநல் வாழ்த்துகள் கூறினான் அன்பினில்
துளிர்க்கும் கண்ணீர் துடைத்து. 


160
குந்தியைக் கண்டங்கு கோமகன் தாள்பணிந்து
வந்தனை செய்தான் வளைந்து 

விதுரன் தூதுரைத்தல்

161.
வாழ்த்தினன் அண்ணனின் வாழ்த்தை வழங்கினன்
ஏழ்மை மனத்துடன்  ஐவரை நோக்கினன்
தாழ்த்தினன் தன்தலை, தீதுடை தூதுரைக்க
வாய்த்த விதியை  மதித்து.


162

ஆழ்கடல் தன்னில் அமிழ்ந்திடும் ஓடம்போல்
ஆழ்ந்தனன் சிந்தையில் ஆவி கலங்கினன்
தேய்ந்தது நெற்றியும் தேய்த்த விரல்களால்
காய்ந்தனன்  உள்ளம்  கனன்று

163.
வருவது யாவும் வருந்திடப் போமோ?"
மருகும் மனதை மனத்தால் ஒதுக்கி
செருதரு செய்கையை செய்ய முனைந்தான்
தருமத்தின் முன்மகன் தான்.

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -014

விதுரனை தூதுக்கு அழைத்தல். 

142

மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்
இதுவரை நீதிசொன்ன  தன்நிலைக் கொன்று
முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்
விதுரனைத் தூதாய் விடுத்து.

143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான்  சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்


144

வஞ்சனை மாமனின் வஞ்சகமும்  உள்ளதென்று  
பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும் 
அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும் 
மிஞ்சிடா தென்று மிழற்று. 


( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் ) 

145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்
என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான் 


விதுரன் வேதனையால் சொல்லுதல்

146 
போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்
ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்
பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்
மூச்சிலும் உண்டே முரண்

147
எத்தகு வார்த்தை  எளிதில் இயம்பினாய் 
மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர் 
கற்றதை  காற்றில் கரைத்தனையோ முன்னவனே 
உற்றதை நீயும்  உரை 

148
வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே
கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா
பஞ்சவரைச்  சூதில் பகடையால் வென்றபின்னர்
எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -013

திருதராட்டிரன் சம்மதித்தல்.

136.

அதிசய மைந்தனும் வந்து அழிக்க  
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான் 
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே   மதித்து

137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில் 
சதிசெய்கை செய்யநான்  சம்மதித்தேன்  என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு 
விதியிது  என்றான் மலைந்து

மண்டபம் உருவாகுதல். 

138
-
மஞ்சனும் மாமனுடன்  மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில்  பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும்  கண்டு வியந்திட 
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும் 
மிஞ்சி உயர்ந்ததவ்  வீடு

139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட   திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள் 
கொண்டு சமைத்தார் கொலு 

140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல். 

141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும் 
அரவின் அழகுபோல் ஆம். 

Monday, January 13, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -012

திருதராட்டிரன் சம்மதித்தல்.

136.

அதிசய மைந்தனும் வந்து அழிக்க 
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான்
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே   மதித்து

137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில்
சதிசெய்கை செய்யநான்  சம்மதித்தேன்  என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு
விதியிது  என்றான் மலைந்து

மண்டபம் உருவாகுதல்.

138
-
மஞ்சனும் மாமனுடன்  மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில்  பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும்  கண்டு வியந்திட
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும்
மிஞ்சி உயர்ந்ததவ்  வீடு

139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட   திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள்
கொண்டு சமைத்தார் கொலு

140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல்.

141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும்
அரவின் அழகுபோல் ஆம்.

விதுரனை தூதுக்கு அழைத்தல்.

142

மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்

இதுவரை நீதிசொன்ன  தன்நிலைக் கொன்று

முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்

விதுரனைத் தூதாய் விடுத்து.

143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான்  சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்

144

வஞ்சனை மாமனின் வஞ்சகமும்  உள்ளதென்று 

பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும்

அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும்

மிஞ்சிடா தென்று மிழற்று.



( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் )

145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்

என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான்

விதுரன் வேதனையால் சொல்லுதல்

146

போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்

ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்

பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்

மூச்சிலும் உண்டே முரண்

147

எத்தகு வார்த்தை  எளிதில் இயம்பினாய்

மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர்

கற்றதை  காற்றில் கரைத்தனையோ முன்னவனே
உற்றதை நீயும்  உரை


148

வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே

கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா

பஞ்சவரைச்  சூதில் பகடையால் வென்றபின்னர்

எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?


திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்

149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும்
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ  நம்மையும்
வென்று  நடக்கும்  விதிவழி நாம்செல்வோம்
என்றனன்  மன்னன் இயைந்து.

150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி
உந்தும் நிலையில் உலைந்து

Sunday, January 12, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -011


துரியோதனன் பதிலுரை

125

மூடன் சுயோதனன்  முன்னவன்சொல் கேளாது
பாடம் பலவுரைத்தான்   -கோடாது
நின்றிடும் மன்னன் மனநிலை நீர்க்கவாய்
வென்றிடும் வார்த்தை விளைத்து 

126

மோதிடவும் அஞ்சுகிறாய் மொத்தமாய் சாய்த்திட 
சூதினிற்கும் அஞ்சுகிறாய்  துன்பத்தை ஊட்டுகிறாய்
மாதிறம் மட்டும்தான்  மாறாமல்  ஏற்றிடுவேன் 
வாதினி ஏனாம் விளம்பு


127
விதுரன் அறிவால் விளம்புகிறாய் உந்தன்
மதிகெட்டுப் போனதோ  மன்னா இதுவரை
பாண்டவர்க்கே பாசம் பயந்தவன்  உன்னிளையோன்
மாண்டிடினும் மாறான் மனம்

128
கானகத்தில் வாழுகின்ற காட்டுத் தபசியர்போல்
தானறிந்த பல்துதியுன்  தம்பி பகர்கிறான் 
மானமிலான் தன்மனதில் மாண்பிலான் சொல்கேட்டால்
வானகம் செல்வேன் மறைந்து. 



129

வெல்லுதல்  வேந்தர்க் கடமை பகையெதிர்த்து
செல்வது நம்முரிமை  செற்றில்  பகையழிக்க
நல்வழியோ தீவழியோ நாணாது  ஏற்கவெனச் 
சொல்வது முன்னோரின் சொல். 


130
பகைத்தவர் ஓங்கிட பாண்டவர் நம்மை
நகைத்திட வாழல் நலமோ குகைக்குள்
திகைத்து பயந்திடும் சீயம் சிறக்குமோ
பகையழித்தல் ஒன்றே பலன். 

131

பழையநிதி போதும் பகைவேண்டாம்  என்றால்
விழைந்துநம் வாழ்வதனை வீணர்கள் கொள்வர்
இழைப்பர் கொடுமை இயலாதுநாம் காண்போம்
பிழைத்து இருக்கும் பிழைப்பு 

132
போர்த்தொழில் வேண்டாது போவென்றால் வேறான 
ஓர்த்தொழில்  உண்டு  உனக்க்தனை சொல்வேன்கேள்
பார்புகழ் மாமனின் பண்டைத் தொழிலுண்டு
சார்வோம் அதையும் சற்று

134

மோதுபோர் இன்றி முடிக்கலாம் இச்சைகளை
சூதுக்(கு) அழைத்திடு துன்பங்கள் ஏதுமின்றி
மாதுடை ஐவரையும் மாண்பிழக்கச் செய்திடுவோம்
ஏதுபிழை உண்டோ இயம்பு


135

ஓவியம் போலாய் உறைந்துநின்ற   தந்தையிடம்  
கூவிபல குன்றுதோள் கோமகனும் சொல்லிட்டான் 
ஆவி இறுத்திடுவேன் ஐயா இதைமறுத்தால்
பாவியுன் பாதத்தில் பார்

Thursday, January 9, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் 010

திருதராட்டிரன் பதில்

113
என்றுவிள ஏந்தல் எடுத்தியம்ப அத்தியின் 
மன்னன் நிலையிழந்தான்  மன்றத்தில் -என்செய்ய
பேயெனும்  பிள்ளைப் பெயர்சொன்னால்  சீயென்றான் 
சேயென்றோர் நாவைச்  சினந்து. 

114
பாவியின் சொல்லால் பதைக்கிறான் மன்னவனும்
ஆவியும் சோர்ந்து அவனுரைத்தான்  -கோவத்தால்
நாணாமல்  செய்கிறான்  நாணுமிச் செய்கையை 
வாணாளில்  தீராப் பழி


115.
வீடுறை வேந்தர்க்கும் வீண்பேச்சு வீணர்க்கும்
காடுறைதல் நற்கதி காண்பாய்நீ தோள்வலியால் 
பீடுநடை கொண்டு பெரும்புகழ் சேர்ந்தார்க்கே
நாடும் நாநிலமும் நாடும்


116
சின்ன மதியுடையாய் சிந்தை இழந்தாயோ
கன்னல் மொழிபேசிக் கண்டாரோ உன்னிடத்தில்  
முன்னம் மரியாதை முந்தித் தருவாரோ
இன்னல் இழைத்த உனக்கு 

117
மாடங்கள் மாளிகையில் மந்திர மண்டபத்தில் 
ஆடல் அரங்கதில் அத்தனைப்பேர் கண்டிருக்க
வாடா மலர்கண்டு வண்ணமாய் நீர்கண்டு
மூடா மயங்கினாய் முன். 

118
தவறிக் கீழ்வீழத் தாயும் நகைப்பாள்
அவர்மேல் குற்றம் அடுக்கி -கவர
நினைக்கிறாய் நீள்நிலம் அத்தனையும் நெஞ்சில்
வினைகொண்டால் வீழ்த்தும் விதி. 


119
கண்ணனுக்கு அர்க்கியம் கண்டதால் காய்கிறாய்
அண்ணனுமாய் தம்பியுமாய்  ஆனதினால் -மண்ணிலவர் 
அன்னியமாய் நம்மை அணுகவில்லை மன்னவனே
அன்பில்  உறவில்நாம் ஒன்றாக ஆகிமுந்து
சன்மானம் கேட்டல் தவறு

(முந்து சன்மானம் - முதல் மரியாதை - அர்க்கியம்)


120
வீட்டுமன் சொல்லிட வீரர்கள் தட்டாமல் 
கேட்டதைச் செய்தனர் கேள்வியேன் -வீட்டினில்
உற்றப் பெரியோரும்  உன்குருவும் சொன்னதினால்
மற்பேச்சும் சொல்லாமல் மன்றத்தில் கண்ணனுக்கு
கற்றமகன் தந்தான் கனிந்து 

121
ஆரிவர் செய்வார்நின் ஆண்மையிலாச் செய்கையும்
பாரிதை  நீவிடுத்து பாண்டவர்போல் தோளுயர்த்து
சோரர் மகனோநீ சோமன் குலமன்றோ
பாரினில் ஓங்கிடப் பார்

122
கண்ணனும் யாரென்று கண்ணேநீ கண்டிடடா
கண்ணிரண்டில் காணவியலாத காளையாம் -விண்ணிலும்
மூவரிர் மூத்தவனாம் முந்துதெய்வம் நாரணனன்
தேவனவன் ஆவான்  தெளி

123

பாம்பணையில் தூங்கும் பரந்தாமன் ஓதிடுவார்
தாம்பயிலும் உத்தமன் தாரணியில் -காம்பிழுக்கும்
யாதவத் தோன்றலவன் யாவர்க்கும் தெய்வமவன்
சீதவிழிச் சீதரனாம் செப்பு

124
ஞானம் அறிந்திடு நல்லோர்சொல் நாடிடு
நானெனும் ஆணவம் நாடாமல் மோன
நிலையடை என்று நலம்பல சொன்னான்
குலையா மனதுடைக் குன்று

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் 009

சுயோதனன் தந்தையைச் சினந்து சொல்லுவது

105
பாம்புக் கொடியோன் பகரத் தொடங்கினான்
பாம்பெனச் சீறிப் பலமொழி சொல்கிறான்
தாம்கொள் மகவிற்கு தந்தைசெய்யாத் தீவினையை 
வேம்பென செய்தாய் வினைந்து 

106
இன்னமுதாம் ஐவர்; இன்னல் உனக்கானேன் 
துன்னமான(து) உள்ளமென்   துன்பறியா மன்னவனே
என்னன்ன கட்டுரைகள் என்னிடம் சொல்லுகிறாய்
வன்னமாய் வார்த்தை வளைத்து. 

சகுனியிடம் உரைத்தல்;

107
மாமனே கேளிதனை மன்னர்க்கோர் நீதி;மற்றுத்
தாமனைவர்க் கோர்நீதி தந்தானவ் வியாழமுனி
ஆமதனை  ஏற்காது அத்தனையும் தள்ளிவிட்டான்!
மாமன்றில் நின்றேன் மலைத்து

108

இந்திர போகமென ஏய்க்கிறான் என்னையும்
மந்திர வாதிபோல் மாய்மாலம்  சொல்கின்றான் 
தந்திரம் கற்றோர் தரணியில் யாருண்டென்
தந்தைபோல் என்றான் தவித்து

 
109 
மாதர்தம் போகம் மயக்கும் மொழிபேச்சும்
சாதமும் நெய்யும் சதமென்றான்  எந்தனுக்கு
சோதரர் பாண்டவரைச் சொந்தமெனச் சொல்லியவன்  
பாதகம் செய்கிறான் பார்

துரியோதனன் தந்தையிடம் தீர்மானமாகச் சொல்லுவது 

110

கண்ணிலே வெண்ணெயுடன் காக்கின்றாய் பாண்டவரை
கண்ணிலே சுண்ணமுடன் காய்கின்றாய்  என்னையும்நீ
மண்ணிலே பற்றுவைத்தேன் மாறேன் மனமென்றும்
எண்ணத்தில் என்றும் எண்ணு

111

தீதென்று நீநினைத்தால் தீய்த்திடென்னை;  தந்தையே
வாதென்று இன்னுமென் வாய்த்திறவேன் போதுமுந்தன் 
சூதெனக்கு, பாண்டவர் துய்க்கநான்  கூற்றமெனும் 
மாதென்னைச் சேர்ப்பேன் மடிந்து

112

மாதிறத்தோய்  போர்நீ மறுத்தால் மாறுவழி 
தீதிலா நல்வழியாய்  சீராக நானுரைப்பேன்
கேதின்வாய் வீழ்நிலவாய் கேள்வரை வீழ்த்திடுவோம் 
சூதினில் வெல்வோம் சுழித்து

Tuesday, January 7, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -008

திருதராட்டிரன் சகுனியிடம் வெகுண்டு அறம்  உரைத்தல்

95
கள்ளச் சகுனியுரை கண்ட அரசனும் 
பிள்ளையை நாசம்செய் பேய்தான்நீ -வெள்ளத்தில்
மாண்டுவிழும் புல்போல், மடையனே நம்வலிமை
பாண்டவர் முன்தான் பார். 

97
சோதரர் தம்மிடையே சோதனை இல்லையடா
சீதரன் அத்தருமன் சீலத்தால் ஏற்றமுற்றான்
காதங்கள் தள்ளியும்தன்  கற்பிலவர் மேல்வந்தார் 
பாதகனே சற்றதைப் பார் 

97
சிறுவயது நாள்முதலாய் சீற்றக் கொடுமையுடன்
உறுபகையும் உள்ளத்தில் ஓங்க, -மறுத்தான்
அவருரிமை மைந்தன், அவனுக்கு   சொல்லலைநீ
தவறதனை  தன்மையுடன் தான். 

98
மன்னவர்க்கே நீதிசொல்ல மாமன்நீ 
வன்னமாய் வார்த்தை வளைக்கின்றாய் வஞ்சத்தால்
முன்னம்  மலைமோதி மண்குடம் உய்ந்ததென்று
சொன்னகதை உண்டோ சொல்

99
தீதிவன் செய்ததை சிந்தையில் வைத்திடாதென் 
மீதிலன்பு மிக்கிடும்  மைந்தர்மேல் மோதிடென்று 
சூதினால் தீதிழைத்தால் தீயென தீய்த்திடுவர்!
வாதிதில் உண்டோ விளம்பு 

100
கண்ணனுக்கு அர்க்கியம் கண்டுனக்(கு)  என்னகுறை
மண்ணில் அவனைப்போல் மற்றோரைக் கண்டதுண்டோ
வண்ணச் சிறகணிந்த மாதவன் போலந்த
விண்ணிலும் உண்டோ விளம்பு 

101
அண்ணன் தம்பியருள்  அந்நியர்போல் சற்காரம்
பண்ணுதல் நன்றோ பகரென்று பல்விதமாய்
வண்ணமாய் சொன்னான் வலிந்து.  

102
முதுமொழி முன்னோர்சொல் நல்மொழி உண்ணி
விதுரன் தமையன்  விளம்ப -மதுமொழியால் 
பட்டறிவும் தம்பியின் பாடமும் கண்ணாக்கிச்
சுட்டினான் சொற்களைத் தோய்த்து

102
கல்லார்க்கு கற்றோர் கனிந்து இயம்பும்சொல்
புல்லோர் மனதில் புகுந்திடுமோ -வல்லானும்
மன்னவனின் சொற்கள் மனதில் வெறுத்ததில்
இன்னாமொழி ஏற்றான் இசைந்து. 

104
மருந்துகொள் என்று மகவிடம் சொன்னால்
உருண்டு அழும்குழந்தை உள்ளம், சலங்கொண்டு
கண்ணழ தாயினைக் காய்வது போலானான்
கண்ணிலான் பெற்ற கன்று 

பாஞ்சாலி சபதம் -007

திருதராட்டிரன் சொல் கேட்டு துரியோதனன் வெகுளுதல்.

82
தந்தை மொழியால் தனயன் முகம்கருத்து
வெந்தழலாய்  மாறினான்,  வேந்தன் மொழியெதிர்த்து
கண்சிவந்து காய்ந்தான்; கனலுடன் நூற்றுவரில் 
​​முன்னவன் நின்றான் முனிந்து

83
உன்பிள்ளை நானன்றோ உன்னன்பு  ஏனில்லை
பின்னமாய்   நாட்டைப்  பிரித்தனை -இன்னலுக்குத் 
தந்தையும்  நீயோ? தயையுமென் மீதிலா
விந்தையை நீதான்  விளம்பு

84
என்று பலவாய் இளவலும் வாய்வீச
குன்றிய கோவின் குமுறும் நிலையதனை,
கன்றும் மனத்தினனக்   காவலனைக் கண்டவர்    
அன்று கலங்காதார்  யார்

சகுனி துரியோதனனை தடுத்துப் பேசுதல்

85
தந்தைமொழி கேட்டுத்தன்  சிந்தை இழந்தமகன்
தன்னை மறந்துகடுஞ் சொல்லாய் புலம்பிடவே;
அன்பாய் சகுனியவன் ஆறுதல் சொல்லிநின்றான்
மன்னன் மனத்தை அறிந்து. .
86
கொடுஞ்சரம் போன்றவன்  கொட்டிய சொற்கள்
தடுத்தல் வேண்டி சகுனி உரைத்தான் 
கடுஞ்சொல் வேண்டாம் கவலைதனை நீட்ட
சுடுஞ்சொல் போலுண்டோ சொல்

87
​மிஞ்சும் இளவலால் மிஞ்சிடும் காரியமென்(று)
அஞ்சினான் மாமன் அடுத்துதன் - கொஞ்சுமொழி 
கொண்டங்கு பேசினான் கொற்றவனைச் சாய்த்திட
​வஞ்சனையை வாக்கில் வளைத்து. 

88
பின்சொல்வான் மாமன் பிரித்தாளும் சொற்களில்
மன்னவா நின்மகனை மன்றில்  இகழ்ந்தார்நின்
பின்னவனின் மக்கள் பேதமையால் உன்மகனை
உன்மத்தன் போல ஒழித்து

89 
முந்து மரியாதை முன்னவா நின்மகற்கு
தந்திலன் அந்தத் தருமனும் -பிந்தும் 
இடையனாம் கண்ணன் இயந்ததைக்  கொண்டான்
பயந்தநல் வாழ்வின் பயன். 

90
சிலையொத்த மங்கை சிரித்தாள் ஆங்கே
கொலையொத்தக் கூற்றாய்க்  கொடுநகையும் கண்டு 
வலையில்வீழ் வேங்கையென வாடிக் கனன்று 
சிலையென நின்றான் சினந்து

91
சீற்றம் தணிந்திடவும் சிந்தியாதோர் மாசுறவும்
போற்றியோர் தூற்றி பொசுக்க,மனம் -மாற்றிட 
பாண்டவர் செல்வத்தை  பாரினது பாரமதை
வேண்டிமகன் நின்றான் விரைந்து. 

92
பலநூறு யானை பலம்கொண்ட  மைந்தன்
நிலமகளைக் கேட்டான் நினைந்து -பலவானே
உந்தனது செல்வம் உயர்ந்திடவாய் சொல்லுகிறேன்
சிந்தையில் ஏற்பாய் சிறிது

93
 ஆண்டவரைத் தாக்கி அரசைநாம் கொள்வதறம்
காண்டவ ராஜ்ஜியம் காண்போம்நாம், பார்த்தனை
காண்டகு வீமனை கண்டுமனம் அஞ்சாது மோதிட 
பாண்டவரை சாய்ப்போம் பகைத்து

94
ஆயதுணர் ஆண்தகையே அன்னவர்தம் தோளுயர்ந்தால்
பாயுமவர்  சீற்றமென பல்லுரையால் -மாயச்
சகுனிதன்  தந்திர சாகச சூழ்ச்சித் 
தகுதியைக் காட்டினான் தாழ்ந்து.

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -006

சகுனியுடன் துரியோதனன்  திருதராட்டிரனைக் காண விரைதல் :

69
மண்ணாசைக் கொண்ட மருகனும் முன்விரைந்து  
மந்திரியாம் மாமனுடன் மன்றிற்குப்  புறப்பட்டான்
தந்திரப் பேச்சாலே தன்னாசை சொல்லிவிட
கண்ணில்லாக் கோமகனைக்  கண்டு.

70
முன்னவன் பீஷ்மர், முனியாசான், நல்விதுரன்
மன்றத்தில் வீற்றிருக்கும்,  மன்னர் பலருடைய 
மன்னுபுகழ் மன்றத்தை மாமனுடன் சென்றடைந்தான் 
விண்ணுலகம் போலிருக்கும் வீடு

சகுனி பேச ஆரம்பித்தல் :

71
 துரியன் எண்ணத்தை துர்குணத்தோன்  தானும் 
விரிவாய் பகர விரும்பி -  செரிவாய் 
விரித்தான் வலையை விளம்பினான் மன்றில் 
துரியனின் மாமன் துணிந்து.

71
முன்னவன்முன் சென்ற மயக்குமொழி மாமனும்
மன்னவா கேளுந்தன் மைந்தன் நிலைதனை 
கண்ணுறக்கம் வாரா கவலையில் தானாழ்ந்து 
உண்ணாது நின்றான் உழன்று 

72
மாமனே; என்னருமை மன்னனே; என்பேச்சை 
தாமதம் அற்று தயவுடன்கேள்  நின்மகனும் 
வாமம் இழந்தான் வடிவிழந்தான்,  அய்யாதன்
நாமம் மறந்தான் நலிந்து

73
உண்ணிலன், நீண்டு உறங்கிலன் உற்றதோர் நண்பரை சேர்ந்திலன், நாரியரைக் - கண்டிலன் இன்னுமது ஏனென்(று) இயம்பிலன்; கேட்டிடு ஆண்டகையே நீயும் அறிந்து

சகுனி சொல்வதை கேட்டு திருதராட்டிரன் மனம் வருந்துதல்

74
என்று சகுனி இயம்பிடக் கேட்டலும்
மன்னன்தன் உள்ளம் மருகினான்  - அந்தோ,
தயக்கமும் ஏனடா தந்தையிடம் மகனே
துயரத்தை தூரே துரத்து 

75
சகுனியின் வார்த்தையை சற்றும் சகியேன் 
மி​குதியான செல்வம் மலைபோல் உண்டு
தகுதி உடையோன் தரணியில் நீயன்றோ?
தகுமோடா இச்செயல் தான் ?​​​​​

76
இன்னமுதே முன்னவனே இன்றுனக்கு ஏக்கமேன்
தன்வினையோ தாளாத முன்வினையோ முற்றாமுன்
என்கண்ணே  என்மகனே என்னிடம்சொல் யாதென்று 
இன்றேவுன் எண்ணம் உரை 


துரியோதனனுக்கு சமாதானம் உரைத்தல்
​​​​
77
​என்னரும் முத்துக்கள் எத்தனையோ நல்மணிகள்
தின்னக் கனிகள் திகட்டாநல் - இன்னமுதும்
உன்னைப்போல் யாருமே உய்த்ததில்லை இம்மொழியை 
இந்திரனும் ஏற்பான் இசைந்து

78
நெஞ்சுரம் கொண்ட நம்பியர் நூற்றுவரும்,
பஞ்சவரும் உன்பக்கம், பார்த்தனொடு  வீமனுண்டு
அஞ்சிடுவர் யாரும்  உனைபகைக்க மைந்தாஉன் 
நெஞ்சில் நடுக்கமதை நீக்கு

79
உன்னை எதிர்த்து உயிர்கொண்டாய் ஆருளரோ
என்னை மதித்து இயம்பிடு -என்னவனே
நீகொண்ட செல்வங்கள் நீடுலகில் யார்கண்டார்
தீகொண்ட  நெஞ்சம் திருத்து 

80
பாண்டவர் செல்வமதை பாராது விட்டுவிடு
ஆண்டிடு நின்னரசை அன்புடன்  -காண்மகனே
சோதரர் தானவரை  சொந்தமென ஏற்றுவீண்
போதனைகள் தள்ளு புரிந்து. 

81
இந்திரனும் காணாத இன்னமுதம் தானுண்டு
இன்னுமேன் சோகம் இயம்புவாய் என்றுறைத்த
தந்தையுரை கேட்டு தனயன் மனம்நொந்து
விந்தையிது என்றான் வியந்து


பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -005

சகுனியின் வஞ்சனைக் கூற்று
63
அஞ்சுதலும் வேண்டா அருமை மருமகனே
அஞ்சு தலைக்கதிபன் அஞ்சும் செயலதை
கெஞ்சியேனும் செய்து கெடுதல் விளைவிப்போம்
கொஞ்சியவன் கொற்றம் குலைத்து. 

64. 
வஞ்சியவள் எக்களிப்பை வஞ்சித்தே நீர்த்திடுவோம்
பஞ்சவர் பத்தினியைப் பாரிகழச் செய்திடுவோம்
மஞ்சுசூழ் வெற்புபோல் மங்கையவள்  பேர்புகழை
வஞ்சத்தால் வீழ்த்தலாம்  வா

65
வெற்றி உனக்கு விரைவிலே நான்தருவேன்
பற்றும் விதியவரை பாரென் மருமகனே
எட்டா உயரத்தில் ஏறியவர் நின்றாலும்
வெட்டுமென் பகடையும் வென்று

66
உன்தந்தை ஒப்பிடினும் உன்னுற்றார் ஒப்புவரோ?
என்செய்வாய் மன்னவர்கள் ஏற்குமுரை சொல்வதற்கு? 
முன்னவனாம் வீட்டுமன், முனிராஜன் அன்னவரும்
எண்ணுவரோ உன்நிலைதான்  எண்ணு!

வீட்டுமன் - பீஷ்மன்

67
என்னுரைகேள் மன்னவனே ஏற்றமிகு மண்டபத்தை
கண்ணுறவே  கட்டிவைத்து திண்ணமாய்  வாருமென
மன்னவரை கூட்டிவந்தால்  மண்ணோர் இகழ்ந்திடவே
கந்தலென ஆக்கிடுவேன் காண்

68
என்னுமுறை கேட்டிட ஏந்தல்  உளமகிழ்ந்தான் 
என்னுயிர் ஈந்துநீ எந்தைக்கும் மேலானாய்
என்பழியும் தீரும் எனமகிழ்ந்து  ஆர்ப்பரித்தான்
இன்னுமேன் தாமதம் எப்போ(து) இதாகுமென்று
தந்தைமுன்  செல்லத் தவித்து

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -004

அத்தினாபுரம்  சபையின் காட்சி
-------
43
கன்னங் கரியதுவாய் காட்சிக்(கு) இனியதுவாய்
வன்னத் திருநதியின்  வாச மருங்கினில்
பொன்னில் இழைத்த  புகழ்மாடச் சீரழகை
எங்கனம் சொல்வேன் இயம்பு 

சபையில்  திருதராட்டிரன், துரியோதனன், விதுரன், பீஷ்மர், சகுனி, கர்ணன் முதலானோர் இருத்தல்
-----

44
தந்தைசொல் கேளாத் தனயனுடன்,  தம்பியும்
தந்தைக்குத் தந்தையாம் வீட்டுமனும் சொற்திறத் 
தந்திர மாமன் சகுனியொடு கர்ணனென 
மன்னர் பலருடை  மன்று. 

துரியோதனன் பொறாமை
-+++
45
எண்ணிலாச் செல்வங்கள் ஏற்றமுடன் கொண்டவன்
கண்ணிலான் ஈன்றெடுத்த காவலன்   தன்னிலை
எண்ணிலான் ஏழையென ஏங்கிய காரணத்தை 
எண்ணி இயம்புவேன்  இங்கு 

46
தருமனின் வாழ்வுத் தரத்தினைக் கண்டான் 
பொருமி மனதில் பொறாமை - உரக்கவே
துஞ்சிடும் போதில்  சுகமெலாம்  போகுமென்(று)
அஞ்சினன் வெஞ்சினன் ஆம்

சகுனியிடம் சொல்வது
47
காண்டகு வில்லுடை காண்டீபன் வாழ்ந்திருக்க
மாண்டகு வீமனின் மார்பதில் வீரமதைக்
காண்கையில் நானுமிங் காள்வ தரசாமோ
பாண்டவரங்(கு) ஆனார் பெரிது

48
வேந்தர்க்கு வேந்தனென வேள்வி முடித்திட்டான்
ஏந்திழையின் அண்ணனும்  ஏனோ துணைநின்றான்
பாந்தள்வாய்த் தேரை பதைப்பினை நானடைந்தேன்
சிந்தைக்குள் தீயின் சிலிர்ப்பு.

49
ஆயிரம் மன்னர் அவன்தாள்  பணிந்தங்கு
ஆயிரமாய் பொன்பொருள் அன்பென்று  தானளித்தார்
ஆயிரம் தேள்விடத்தை அன்றே உணர்ந்திட்டேன்
நோயுற்றோன் கொண்ட நிலை.

50
மந்தையெனக் கால்நடைகள் மங்கா ஒளித்தங்கம்
எந்தையும் கொண்டதில்லை ஏனடா மாமனே
கந்தைக்கும் என்னிடத்தில் கையேந்தி நின்றவர்கள்
எந்தைக்கும்  ஏற்றமுற்ற(து) ஏன்?

51
பழவினை என்பான் பாண்டவரில் மூத்தோன் 
கிழவியெனப் பேசும் கிளியாய் -  உழக்கில் 
உலகமதைக் காணும் ஒருவனோ ஆள்வது 
தலைவனாய்  தாரணியைத் தான். 

52
தம்பியர் வல்லமையால் தாரணி ஆள்கின்றான்
உம்பரும் வந்து  தொழுதல் உவப்பாமோ
இம்பரில் முன்நிலை யானறிவேன் சொன்னாலோ
வம்பில் முடியும் வழக்கு.

53.
தருமனவன் வேள்விசெய்தான் தம்பிவலி தன்னால்
பெருமைபல பெற்றான் நிலத்தில்  மாமா
பொறுக்கலையென் உள்ளம் புவியோரும் ஒப்பார்
தருக்கமிலாச் செய்கை தனை

54
உலகப் பெருநிதியை ஓரிடத்தில் கண்டு
கலங்கும் மனதினனாய் காண்கிறாய் என்னை
துலங்கும் வழியறியேன் துன்பமும் என்னுள்
சலங்கையுடன்  ஆடும் சதிர்.

55
மணிபல ஈந்தனர்  மன்னர்கள் ஆங்கே
துணியில் பலவகை; துய்க்க - அணியணியாய்
முத்தும் பவழமும்அம்  மூடனுக்கு தந்தனரே
புத்தி அவர்க்குண்டோ புகல் ?

56
குவியலாய் தங்கமும், குன்றாத வைரம்
தவிக்கிறேன் கண்டதால் தாளா தணலெழும்பி  
மூச்சும் சிறிதடங்க  மாமனே ஓயாவென் 
பேச்சும் அடங்கியதே பின்

57
தலைவன் இவனென்று சாற்றினர் மன்றில் 
கலைந்திடா கூட்டம் களிக்க -  சிலையென
நின்றதுடல், வெந்துமனம் நீர்த்து; நிலையின்றி 
நின்றேன்  அவற்றை நினைந்து 

58
பாரில் உயர்ந்தவர் பாண்டவர் என்றசொல்
பாரினில்   யாரும்   பகர்ந்திட  - காரிருள்
சூழ்ந்ததென் எண்ணத்தில்; சுற்றம் மறந்திட்டேன்
பாழும் கவலையினால் பார்

59
ஏதுசெய்வேன் மாமனே என்னுயிர் போகுதே 
ஊதுலைபோல் உள்ளமது வாடமனம் - வாதுசெய்து
என்னை வதைக்குதே  என்று முகம்கருத்து
முன்னவன் நின்றான் முனிந்து. 

60
வெஞ்சமர் வீரர்முன் எக்களித்த ஏந்திழையும்
நெஞ்சிலே ஊழி நெருப்பினைத்  தூண்டினள்
துஞ்சவும் அஞ்சும் துயரினில்  நெஞ்சமும்
பஞ்சவர் பத்தினியால் பார் 

61
யாதே இழப்பினு(ம்) என்மாமனே எந்தனுக்கு
தீதேதான் நேரிடினும் தீதில்லை, - தீதவற்கு
வேண்டுகிறேன், பாண்டவர்தாம் வேருடன் வீழ்ந்திடத்
தூண்டு அரசைத் துளைத்து. 

62
என்றிவை சொல்லியவன் ஏழையாய் காய்கின்றான்
கன்றிழந்த தாய்போல் கவலை மிகக்கொண்டான்
குன்றெனும் தோளும் குலைந்து தரைசேர்ந்தான் 
வென்ற விதிக்குள் வீழ்ந்து.

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -003

இராசசூய யாகம் : முன்கதை  தொடர்ச்சி 
****

36. சிந்தனைக்கு எட்டா சிறப்பினைக் கொண்ட
இந்திர லோகம் இறக்கி அதன்மேல்
எழுப்பியதோ இந்த அரண்மனை என்று
செழுமையாய் நின்ற சிறப்பு.

37. மன்னர்க்கு மன்னராம் மாமன்னர்  ஆகவென 
திண்ணமுடன்   ஐவரும் சீர்மிகும்  -கண்ணன்
துணையுடன் காண்டீபம் சேர்ந்திடவே  செய்த 
இணையிலா யாகம் அது!

38. யாகம் எதிர்த்தோர் யாவரயும் போரிட்டு
தேகம் அழிந்திடத் தீர்த்தனர்; பாகம்
பிரித்தபின் பாண்டவர் பல்லுயரம் ஓங்க
சிரித்தனர்  வெற்றிச் சிரிப்பு

துரியோதனன் மாளிகை காணல்:
*****************************************

39. மண்டபம் கண்டான் மாமனொடு அன்னேரம்
கண்டது வாவியென்று கால்வரை ஆடைதூக்கி
நாணம் இழந்து நடந்தான்  உண்மையில்
வானவன் செய்த வழியது; மாயம் 
உணரா தலைந்தான் உழன்று 

40. ஆங்கோர் இடத்தினிலே  ஆழியென  நீரிருக்க
காண்கையில் மாயமென காணாது - தாங்காத 
தண்ணீரில் கால்வைக்க தள்ளாடி வீழ்ந்தான்
கண்டவர் தான்நகைக்கக் காண் 

41. நகைத்தோர் யாரென நோக்கினான் ஆங்கே
வகையாய் சிக்கினாள் வஞ்சி - பகைத்தான்
பஞ்சவர் பத்தினியை; உள்ளில் வளர்த்தான்
வஞ்சத்தை நெஞ்சில் வலிந்து 

42. பஞ்சவர் கொண்ட பலவகைப் புகழதும்
நெஞ்சினைக் கொன்றிட , நஞ்சொத்தோன் -மஞ்சுசூழ் 
பாண்டவர் நாட்டை பார்த்த சுயோதனன்
மாண்டவன் ஆனான் மனதளவில் காண்டவ
காடதும் நாடாகக் கண்டெரி  உள்ளத்தான்
வீடதும்  சேர்ந்தான் விரைந்து
****



பாஞ்சாலி சபதம் - வெண்பாவில் 001

காப்புச் செய்யுள்கள் 
**********************

கணபதி துதி :

1
கோட்டானை தன்முகத்தைக்  கொண்டானே நின்னருளைப் 
பாட்டாலே பாடி, பருகுவேன் நற்றமிழை!
கேட்காமல்  கேள்வி நலமருளும் நாயகாவென் 
வாக்கினில் நீவா வலிந்து


2
கொஞ்சுமொழி பேசிடும் பிள்ளை மழலைபோல்
பிஞ்சுமொழி பேசிப் பழகிடும் என்பிழையை
நெஞ்சில் நினையாதே, நானெழுதும் பாவிற்கு
கந்தனின் சோதர;நீ காப்பு 

3
சொல்லும் செயலதும் சீர்மிகச் செய்வோனே 
நல்லன நெஞ்சிருத்தி நாவிசைக்க வந்தேன்யான்
அல்லல் கலைந்திடும் ஆனை முகத்தானே 
தொல்லை களைந்துள்ளே தோன்று


​​பாரதி தந்த;நல் பாஞ்சாலி சூளுரையை 
பாரதிர வெண்பாவாய் பாடிநிற்பேன்- தீர 
மனத்துடன் மாசின்றி மாண்பாய் முடிக்க   
கணபதியே இந்நூற்கு காப்பு

கந்தனுக்கு வணக்கம் :

5
வந்தவை யாவுமே கந்தனின் வார்த்தைகள்
அந்தமிலாச் செம்மொழியை ஆள்கின்ற - எந்தையவன்
தந்ததன்றி மற்றில்லை சந்ததமும் நெஞ்சேநீ
கந்தனையே எண்ணிக் கனி.

எந்தனைக் காக்கும் ஏரகச் செல்வமே
வந்தனை செய்கிறேன் வள்ளி மணவாளா
சிந்தனையில் எழுகின்ற சீர்மிக்க பாக்களுக்கு
கந்தனே  நீயாவாய் காப்பு 


சரஸ்வதி வணக்கம் :

6 - 
கல்வியின் தாயே கலைவாணி வேண்டுகிறேன்
எல்லையிலா  இன்னமுதாம்  என்தமிழை - பிள்ளை
விளையாட்டாய் பாடுகிறேன், வித்தகியே ஞானக்  
கலைமகளே;  காத்தருள் செய் 

7 - 
வேதத் திருவுருவே வேதாந்த பொற்குவையே
பாதம் பணிந்து பரவசமாய் பாடுகிறேன்
ஓதுமென்  பாக்களெல்லாம்  ஓங்கி உயர்ந்திட
வாதின்றி  வாழ்த்திட வா  
 
8 - நாவினிக்கப் பாடி நயம்பட நல்கிடும் 
பாவினை நானும் பயிற்றவல்லேன் - பூவிலுறை
நாயகியே  பாவென்று நானெழுதும்  யாவிற்கும்
​தாயன்பாய் சொல்லெடுத்துத் தா..

9-
​கல்வியின் நாயகியே; தாயே கலைவாணி;
சொல்லுள்நீ ஏறி சுடர்விடுவாய் - மெல்லியலாள்
கோபத் தழல்கொண்ட கூந்தலாள் பாஞ்சாலி
நாபற்றி பேசவந்தேன் நான்!​

10-
பண்ணுக்கு அதிபதியாய் பாடற் கரசியுமாய் 
எண்ணம் நிறைத்தென்றும் ஏற்றங்கள் தந்தருளும்
அன்னையை யாசித்தேன் அன்னவள்தாள் பூசித்தேன்
மென்கமலப் பாதமே மின் 

11-
வெள்ளைக் கமலத்தில் வீணைகொண்ட நாயகியும்  
பிள்ளைத் தமிழால் பிதற்றுமென்   கள்ளமிலா
நற்கவியை நானிலத்தோர்  ஏற்றிடவாய் நாமகள்தன் 
சொற்கள் தருவாள் சிறந்து.  


 பாஞ்சாலி வணக்கம் 

12 -  
பஞ்சவர் பத்தினியே பாஞ்சாலி பேருடையாய்
வெஞ்சமர்க்கு வித்திட்டாய், வீரர்கள் - செங்குருதி
நீக்கியத்  தீச்சுடரே நின்புகழை பாடுமென் 
வாக்குக்கு வலிமை வழங்கு

13-
உலகமே போற்றிடும் பாஞ்சாலி  உன்னைப்
புலமையிலாப் புல்லன்யான் பாட  -பலவிதப்  
பாவிடர்  நீக்கிநல் பண்களாய் மாற்றியென் 
நாவினின்று காப்பாய் நயந்து.

************************


பாரதிக்கு வணக்கம்:

14-
பாரதம் பெற்றநல் பாட்டுடை பாவலன் 
பாரதி பாங்காய்  படைத்து நமக்களித்த 
பாரத பங்கை;வெண் பாவாய் பகிர்கிறேன் 
பாரதிதன் பாதம் பணிந்து


கண்ணன் காப்பு

15
மண்ணை விழுங்கிய  மாலவன் தன்னழகைக்
கண்ணால் பருகிக் கருத்தினால்  - எண்ணிநிதம் 
ஊண்மறந்து உள்ளம் உருகிநாம் பாடிட 
வான்திறந்து  பெய்யாதோ விண்

16
கார்குழல் மேனியனாம் கண்ணனென்ற பேருடையான்
பார்முழுதும் பல்லாண்டு பாடுமணி  மார்பன்
புவியாளும் உத்தமனின் பேர்பாடி கேட்கும்
செவிகேளா வேறோர் சிறப்பு. 

17
பாஞ்சாலி தன்புகழைப் பாவில் தரவந்தேன் 
தீஞ்சுவை ஊட்டி சிறப்பான பாக்களை
வாஞ்சையுடன் காத்திடென்று வந்தித்தேன் உன்னடியை
காஞ்சனை மன்னவனே  காப்பு.  


அவையடக்கம்:

​18-

புல்கொண்டு  பொற்பை புரட்டும் செயல்போல
மெல்லூரும் ஆமையும் மேகம்  தொடும்செயல்போல்
வல்லாள்தன் வாக்கை வகையாய் இயம்பிட 
நல்வாக்கின் நாயகி  நாமகளை உள்ளிருத்தி
சொல்ல  முனைந்தேன் துணிந்து

19-
மழலை மிழற்றிடும்  சொல்போல யானும் 
பழகிடும்  பாவைப்  பதிக்க - பழகுமொழி
கற்றோரும் காய்வரோ ? கல்லானுக்(கு) என்னாளும் 
உற்றமொழி சொல்வார் உவந்து 

20-
செய்யும் செயலதற்கு  சீர்மிக்க சொல்லறியேன்
பெய்யும்  மழைபோல பேசலுற்றேன் -  நொய்ம்மையாய்
என்கவிகள் கண்டாலும் எண்ணிடார் ஏசிடார்
நன்மையே நாடிடும் நல்லோர்தான்  ஆதலினால்
என்னிடம் சேரா(து) இகல். 
************

பாஞ்சாலி சபதம் - வெண்பாவில் 002

அத்தினபுரமும் முற்கதை வரலாறும்
*************
21 -
அத்தினபுரி என்றோர் அழகு  நகரதுவாம்
மொத்த அழகும் முழுதுள்ளே - வைத்ததுவாம் 
பித்தம் தருகின்ற பேரழகோ  நம்முடைய
சித்தத்தில் நிற்கும் சிறப்பு !

22-
எத்தனைச் செல்வங்கள் என்றியம்ப யாருளரோ
முத்தொளிர் மாளிகையுள் முத்தணி மாதர்கள்
எத்திசை நோக்கினும் எல்லாமும் அங்குண்டு 
சித்தத்தால்  காணும் சிறப்பு

23-
அந்தணர்கள்  வீதியுண்டு ஆங்கவர் பாடமுண்டு
செந்தழல் யாகமுண்டு செவ்வியநல்  வேதமுண்டு
முந்தியவர் ஓதிட  மூவர்தேவர்  ஆர்த்தெழுந்து 
வந்துநின்று காப்பார் வலிந்து. 

24
மெய்தவத்தார் உண்டெனினும் பொய்த்தவரும் அங்குண்டு
செய்தவத்தால்  சீர்பெற்றார்  செம்மைநோக்கி சிந்தைமாறா
பொய்தவத்தார் நின்றார் புலைத்து. 

25
வீரக்  கழல்கொண்டார் வில்லொடு வேல்கொண்டார்
பாரமாய்  எண்ணிப் பகையழித்துச் சென்றிடுவார் 
வீர மறவர் வரைவிஞ்சும் தோளுடையார்
தீரரவர் செய்கை சிறப்பு


26
சுற்றும் குதிரைகள் சூழ்ச்சிமிகு கோட்டைதனில்  
சற்றும் சலியாது துஞ்சிடா வாரணங்கள்
முற்றிலும் சூழகழி முன்மயங்கும் வேலையதும்
சொற்களில் சேரா சிறப்பு. 

சூழகழி - சூழ் அகழி, வேலை - கடல்
27
வண்ணமாய் பற்பல விண்தொடும் கோபுரங்கள்
திண்ணமாய்  செப்பிடின் சீர்பல கொண்டிருக்கும் 
விண்ணோரும்  எண்ணி வியந்திடும் நன்னகர்
அண்டத்தில் காணா அழகு 
-+++

28 -
அவனிபுகழ் மாளிகை; அத்தாணி  மாடம்  ; 
பவனிவர  நல்வீதி; பால்சொரியும் மாக்கள்; 
தவத்தினில் சீலர்கள் ; தீரர் பலரென்றே; 
அவயமாய் கொண்ட அரசு. 

​29-
ஆழ்ந்த அழகுடை ஆறவள்   பேர்யமுனை
வாழ்மக்கள் யாவர்க்கும் வற்றாநல் - ஊழெனவே
வாழ்விக்கும் தன்மையினால் வள்ளலாய் ஆனாள்தன்
பாழ்நிகர்த்த வண்ணம் வளர்த்து 

30 -
கொள்ளை அழகுக்கு; கோமானாய் பாண்டுவெனும் 
வெள்ளை உடல்கொண்டான் வீற்றிருந்தான் - வல்லியதோர்  
சாபத்தால் தன்னுடல் சாய்த்ததினால்; முன்னவன்தன் 
தாபமதை தீர்த்தான்  தணிந்து 

31 - 
மஞ்சத்தில் சேர்ந்தாலே மாண்டிடுவாய் என்றதோர் 
நஞ்சொத்த சாபத்தால் நாயகன்  உயிர்மாள 
தஞ்சம் அடைகின்றார்  தானவனின் ஐம்புதல்வர்  
 வஞ்சம் அறியாது   வந்து 

துரியன் செயல் :

32 - 
தனக்கோர் தாயாதி தன்னெதிரே கண்டதும்
மனம்வெதும்பி மாயச் சதியால்  - குணம்கொண்ட
பாண்டவரை மாய்த்திடவே பல்லரக்கு  மாளிகைக்கு
வேண்டி அனுப்பினான் விரைந்து

33 - 
சதியை தவிர்த்து சாகசம் செய்து
விதிவழி பாஞ்சாலன் வஞ்சியை சேர்ந்து;
மதியிழந்து மன்றில் மறுபடி சேர்ந்தார்
விதிவழியில் முன்னிருந்த வீடு

34- 
 உள்ளெரியும் நஞ்சாய் உருக்குலைக்கும் வஞ்சத்தை
உள்ளில் வளர்த்தான்  உவகையுடன் - கள்ளத்
துரியன்தன்  வஞ்சம் துலங்கிட; தாத்தன் 
பிரித்தனன்  நாட்டைப் பகிர்ந்து

35 - 

கொடுத்த இடமும் கொடுவனம் ஆயினும்
எடுத்து  முடித்தார் எழிலுடை  நாடென
அடுத்துக் கெடுக்கும் அரவக் கொடியோனும்
கடுத்துக் கிடந்தான் கழுது.
****